அடக்குமுறைகளைக் கண்டித்து உண்ணாவிரதம்!

மத்திய மாநில அரசுகளின் அடக்கு முறைகளைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.


இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் ஜூன் 30ஆம் தேதி விடுத்துள்ள அறிக்கையில், "மத்தியில் உள்ள மோடி அரசு, கார்ப்பரேட், பெருமுதலாளிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்காகவே செயல்படுகிறது. இதன் திட்டங்களால் ஏழை, எளிய, சாமானிய மக்கள் கடும் துன்பங்களுக்கு ஆட்படுத்தப்பட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி அரசு, தன்னைக் காப்பாற்றிக் கொள்வதையே இலக்காகக் கொண்டுள்ளது. இதற்காக மோடியின் விருப்பங்களுக்கு அடிபணிகிறது. மாநில உரிமைகளை மோடி பறித்தாலும் எதிர்த்துப் பேச அஞ்சி நடுங்குகிறது.

இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு, நீட் திணிப்பு, பசுமையை அழிக்கும் சேலம்-சென்னை 8 வழிச்சாலை, விவசாயிகள் தற்கொலை, பெண்கள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது, காவிரி நதிநீர் பிரச்சினை, நலவாரியங்கள் முடக்கம், வேலைவாய்ப்பு வீழ்ச்சி, ஆளுநரின் அதிகார அத்துமீறல்கள் என தொடரும் இதுபோன்ற பிரச்சினைகளைக் கண்டித்தும், அறவழியில் இவற்றை எதிர்க்கும் பொது மக்கள், மாற்றுக் கருத்தாளர்கள் மற்றும் எழுத்தாளர்களை அச்சுறுத்தும் விதமாகப் பொய் வழக்குகள் புணைந்து சிறையில் அடைப்பது, அவர்களுக்கு சமூக விரோதிகள் என பட்டம் சூட்டுவது போன்ற அடக்குமுறை செயல்களில் ஈடுபடும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் ஜூலை 5ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

முத்தரசன் தலைமையில் ஜூலை 5ஆம் தேதி காலை 8 மணிக்குத் துவங்கும் இந்தப் போராட்டத்தை திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். சிபிஐயின் தேசியக் குழு உறுப்பினர்கள் ஆர்.நல்லக்கண்ணு, தா.பாண்டியன் மற்றும் வைகோ, திருமாவளவன், காதர் முகைதீன், ஜவாஹிருல்லா, கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்று வாழ்த்துரையாற்றுகின்றனர். மாலை 5 மணிக்குத் திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி போராட்டத்தை நிறைவு செய்து வைக்கிறார்.
Powered by Blogger.