ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பெண்கள் உட்பட 11 பேர் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த, சம்பவம்!

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பெண்கள் உட்பட 11 பேர் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த, சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


டெல்லி புராரி பகுதியின் சாண்ட் நகரில், ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் வீட்டுடன் சேர்ந்து, பல்பொருள் அங்காடி மற்றும் மரச்சாமான் கடைகளை நடத்தி வருகின்றனர். வழக்கமாகக் காலை 6 மணிக்கு எல்லாம் கடை திறக்கப்படும் நிலையில், இன்று (ஜூலை 1) காலை ஏழரை மணி வரை கடை திறக்கப்படவில்லை. வெகுநேரமாகியும் கடை திறக்கப்படாததால், வாடிக்கையாளர்கள் அவர்களது வீட்டுக்கதவைத் தட்டினர். கதவும் திறக்கப்படாததால், ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது, அவர்களது குடும்பத்தினர் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைப் பார்த்து, காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், கதவை உடைத்துப் பார்த்தபோது, 10 பேர் தூக்கில் தொங்கிய நிலையிலும், ஒரு 75 வயது பெண் தரையில் கிடந்த படியும் சடலமாக இருந்துள்ளார். அதில், இறந்தவர்களின் கண்கள் கட்டப்பட்டிருந்ததாகவும், சிலரது கைகளும் கட்டப்பட்டு இருந்ததாகவும் காவல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பெண்கள் உட்பட மூன்று இளம் வயதுடையோரும், 4 ஆண்கள் உட்பட 2 சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக காவல் துறையினர் அனுப்பிவைத்துள்ளனர்.

ராஜஸ்தானைச் சேர்ந்த இந்தக் குடும்பம், கடந்த 20 ஆண்டுகளாக டெல்லியில் வசித்து வந்தது. இந்நிலையில் குடும்பத்தினர் அனைவரும் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது கொலை செய்யப்பட்டார்களா? என்ற கோணத்தில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.