உடல்நலம் தேறி வருகிறார்: தலைவர்கள்!

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நேரில் விசாரித்த பல்வேறு தலைவர்களும், அவர் உடல்நலம் தேறி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் மு.கருணாநிதி உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் அவரது உடல்நிலை குறித்து தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் நேரில் நலம் விசாரித்து வருகின்றனர்.

மருத்துவமனை முன்புள்ள சாலைப் பகுதி முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் இரண்டாவது நாளாக இன்று காத்திருந்து வரும் நிலையில், வெளி மாவட்டங்களிலிருந்தும் தொண்டர்கள் சென்னைக்கு வருகை தந்தவாறு உள்ளனர். கருணாநிதி நலம்பெற வாழ்த்தி அங்கு கையெழுத்திடுவதற்காக அங்கு கையெழுத்து பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன.

மதியம் 12.30 மணியளவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு மருத்துவமனைக்கு வருகை தந்தார். அவரின் வருகையையொட்டி மருத்துவமனை முன்பு பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வெங்கையா நாயுடுவுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரும் உடன் சென்றனர். சுமார் 15 நிமிடங்கள் மருத்துவமனையில் இருந்த வெங்கையா நாயுடு, கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். அவருடைய உடல்நலம் குறித்து ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களிடம் நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.முன்னதாக கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க இன்று காலை மருத்துவமனைக்கு வருகை தந்த மதுரை ஆதீனம், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தார். திருணாமுல் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் டெரிக் ஓ பிரைன் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார். அவரைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பாஜக தேசியப் பொதுச் செயலாளர் முரளிதர ராவ், பாஜக எம்.பி. இல.கணேசன், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், நடிகர் சத்யராஜ் ஆகியோரும் மருத்துவமனைக்குச் சென்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தனர். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தலைவர்கள், கருணாநிதி உடல்நலம் தேறி வருவதாகத் தெரிவித்தனர்.

கி.வீரமணி

ஸ்டாலின், கனிமொழி மற்றும் மருத்துவர்களிடம் கலைஞரின் உடல்நிலை குறித்து விசாரித்தேன். அவரின் உடல்நிலை சீராகி வருகிறது. சிறப்பான மருத்துவர்கள் ஒவ்வொரு முறையும் ஆய்வு செய்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்கள் அளிக்கும் சிகிச்சை நல்ல பலனைத் தருகிறது. கலைஞரின் உடல்நிலை தேறி வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் நலம் பெற்று வீடு திரும்புவார்.டெரிக் ஓ பிரைன்

கருணாநிதியின் உடல்நிலை குறித்தும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தோம். அவர் பூரண நலம் பெற மேற்கு வங்க மக்கள் சார்பாக வாழ்த்துகிறோம்.

முரளிதர ராவ்

மிகப்பெரிய தலைவரான கருணாநிதி, தமிழர்களுக்கு 50 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி உள்ளார். அகில இந்திய அரசியலில் பல வகைகளில் பணியாற்றியுள்ளார். மத்திய மாநில அரசுகளின் உறவு மேம்பட உதவியுள்ளார். அவர் மேலும் பல்லாண்டுகள் வாழ்ந்து நாட்டுக்குச் சேவை புரிய வேண்டும். அவர் குணமடைய வேண்டும் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உள்பட பாஜகவினர் அனைவரும் விரும்புகிறோம்.

சீமான்

கலைஞரின் உடல்நலம் குறித்து ஸ்டாலின், அழகிரி, கனிமொழி உள்ளிட்டோரிடம் விசாரித்தேன். உடல்நலம் தேறி வருவதாக அவர்கள் கூறியது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. விரைவில் உடல்நலம் பெற்று மீண்டும் அரசியல் பணியாற்ற வேண்டும் என்று வாழ்த்துகிறோம். சிலர் எங்கள் கட்சியினரின் பெயரில் பதிவுகளை இடுகின்றனர். ஆனால், எங்கள் கட்சியினர் யாரும் அவ்வாறு செய்யவில்லை.

மதுரை ஆதீனம்

கலைஞரின் உடல்நிலை ஓரளவு சரியாக இருக்கிறது. கலைஞரின் 70 ஆண்டுகால தமிழ் சமுதாயப் பணி, ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்து தமிழுக்காக, ஈழத் தமிழர்களுக்காக, ஒட்டுமொத்த தமிழ் சமுதாய நலனுக்காகப் பாடுபட்ட அவருடைய தியாகத்தை இந்தச் சமுதாயம் ஒருபோதும் மறக்காது. அவர் தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் செய்த பணிகளை இனி ஸ்டாலினும், கனிமொழியும் செய்து வழிநடத்த வேண்டும்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், அவரைத் தொடர்ந்து திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனும் மருத்துவமனைக்கு வந்தனர்.

No comments

Powered by Blogger.