‘குட்டி’ மாதவனின் சாகசம்!

தனது மகன் வேதாந்த் கடலில் செய்யும் சாகசங்கள் அடங்கிய வீடியோவை நடிகர் மாதவன் வெளியிட்டிருக்கிறார்.'அலைபாயுதே', 'மின்னலே' என்ற படங்களைப் பார்த்து காதலைப் பற்றி தெரிந்துகொண்ட அன்றைய இளம் பெண்கள் பலர் இந்நேரம் திருமணம், குழந்தைகள் என்று அடுத்தடுத்த படிகளைத் தாண்டிக்கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலர் ‘மேடி...மேடி...’ என்று பைத்தியமாக இருந்தனர். அவர்களது நோட்டு புக்கில் மாதவனின் புகைப்படம் உள்ள நோட்டை வாங்கி தங்களது ரசிப்புத் தன்மையை வெளிப்படுத்தினர். தொடர்ந்து தமிழ், இந்தி, ஹாலிவுட் என பல திரைப்படங்கள் நடிக்க ஆரம்பித்தார் மாதவன்.

தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த மாதவன் முழுவதும் குணமாகி தற்போது படங்களில் நடித்துவருகிறார். ஏற்கனவே மாதவன் நடித்த 'தனு வெட்ஸ் மனு', தனுஷ் நடித்த 'ராஞ்சனா' ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் எல்.ராய், தற்போது இயக்கிக்கொண்டிருக்கும் படம் 'ஜீரோ'. இந்தப் படத்தில் ஷா ருக் கான் கதாநாயகனாக நடிக்க, அவருடன் இணைந்து மாதவனும் நடித்து வருகிறார். மேலும், தமிழில் 'மாறா' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இவருடைய மகன் வேதாந்த் நீச்சல் போட்டியில் அதிக ஆர்வம்கொண்டவர். சில மாதங்களுக்கு முன்பு, தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு, இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் பெற்றுத் தந்தார். இதனைத் தொடர்ந்து, தன் மகன் கடலில் நடக்கும் சாகச விளையாட்டில் கலந்துகொண்ட வீடியோவை பகிர்ந்து "இது எனக்குப் பெருமையான தருணம். கூடவே பயமாகவும் இருக்கிறது" என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மாதவன் கல்லூரி படிக்கும்போது என்சிசியில் பல சாதனைகளை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
Powered by Blogger.