மன்னாரில் அடிக்கல் நாட்டல்?

மன்னாரில் 180 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள மன்னார் பொது பேரூந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர, கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஸாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் இரான் விக்கிரமரத்தின, பிரதி அமைச்சர் காதர் மஸ்தான், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், ஆகியோர் இணைந்து வைபவ ரீதியாக அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.

குறித்த நிகழ்வில் சர்வ மத தலைவர்கள், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், உதவி அரசாங்க அதிபர், திணைக்கள தலைவர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உப தலைவர்கள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.

மேலும் மன்னார் மாவட்டத்தில் உள்ள மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய ஐந்து பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள நிதி அமைச்சின் கீழ் கிராம எழுச்சித்திட்ட வேலைத்திட்டங்களுக்காக தலா 200 மில்லியன் ரூபாய் வழங்கும் வகையில் பிரதேசச் செயலாளர்களிடம் ஆவணம் வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.