ஜிஎஸ்டி தினம்: பிரதமர் பெருமிதம்!

ஜிஎஸ்டி வரி முறை அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவுபெற்ற நிலையில், நாட்டின் பொருளாதாரத்தில் நேர்மறையான மாற்றத்தை ஜிஎஸ்டி ஏற்படுத்தியுள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


நாடு முழுவதும் ஒரே வரி என்ற அடிப்படையில் ஜிஎஸ்டி(சரக்கு மற்றும் சேவை வரியை) கடந்த ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. ஜிஎஸ்டி முறை அறிமுகப்படுத்தி இன்றோடு (ஜூலை 1) ஓராண்டு நிறைவடைகிறது. இதனை கொண்டாடும் விதமாக ஜூலை ஒன்றாம் தேதியை ஜிஎஸ்டி தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பல்வேறு நிகழ்ச்சிகளும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. டெல்லியில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அம்பேத்கர் பவனில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்கவுள்ளார். வர்த்தக நிறுவனங்கள், தொழில்துறை கூட்டமைப்புகள் இதில் பங்கேற்கவுள்ளன.

ஜிஎஸ்டி தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததன் இந்தச் சிறப்பான நாளில் இந்திய மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கூட்டாட்சி ஒத்துழைப்பு, இந்தியாவின் ஆற்றலுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது ஜிஎஸ்டி. ஜிஎஸ்டி இந்தியா பொருளாதாரத்தில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

வளர்ச்சி, எளிமை, வெளிப்படைத் தன்மையை ஜிஎஸ்டி கொண்டு வந்துள்ளது (GST - Growth, Simplicity,Transparancy).ஒழுங்குமுறை வளர்ச்சி, உற்பத்தியை மேம்படுத்துதல், தொழில் செய்வதை எளிமையாக்குதல் ஆகிய நன்மைகள் ஜிஎஸ்டியால் கிடைத்துள்ளது. சிறு மற்றும் குறு தொழில்முனைவோர் இதனால் பயனடைந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல், நிதியமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ஜிஎஸ்டி சட்டம் அமல்படுத்தப்பட்டு ஓராண்டு வெற்றிகரமாக நிறைவடைந்திருப்பது இந்திய மக்கள் ஆக்கப்பூர்வமான சீர்திருத்த நடவடிக்கைகளை எப்போதும் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை இந்த உலகுக்கு உணர்த்தியுள்ளது. இதுபோன்ற வரி சீர்திருத்தங்களுக்கு வரவேற்பளித்துள்ள நம் மக்கள் பிற நாட்டவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகின்றனர்.

ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் இணையவழி ரசீது (இ-வே பில்) நடைமுறை அமல்படுத்தப்பட்டதும் தடையில்லாத சரக்கு போக்குவரத்துக்குக்கு வழிவகுத்துள்ளது. மொத்தத்தில் புதிய வரி நடைமுறையானது நாட்டின் பொருளாதாரத்தில் பல்வேறு நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஏற்றுமதியாளர்கள், சிறு வர்த்தகர்கள், தொழில்முனைவோர், தொழில் நிறுவன உரிமையாளர்கள் உள்ளிட்டோர் அதன் மூலமாகப் பயனடைந்து வருகின்றனர். அனைத்துக்கும் மேலாக விவசாயிகளுக்கும், சாமானிய நுகர்வோர்களுக்கும் ஜிஎஸ்டி சட்டம் நற்பயன்களை அளித்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Powered by Blogger.