தமிழ் மக்கள் மீது பொய் வாக்குறுதி தினிப்பு!

காணாமல் போனோரை கண்டுபிடிப்பது என்பது மிகவும் பாரதூரமான பிரச்சினையாகும். எனவே, இதற்கு உடனடி தீர்வை வழங்குவோம் என்ற பொய்யான வாக்குறுதியை தான் முன்வைக்க போவதில்லை என, காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் ஆணையாளர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.


காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் யாழ். மாவட்ட அமர்வு இன்று (சனிக்கிழமை) யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது, காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களின் ஆதங்கங்கள், பிரச்சினைகளுக்கு செவிமடுத்த பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”காணாமல் போனோர் அலுவலகத்தின் ஐந்து கிளைக் காரியாலயங்கள் வடக்கில் அமைக்கப்படவுள்ளன. அதில் ஒன்று யாழ்ப்பாணத்தில் நிறுவப்படவுள்ளது. அதன்படி எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் அதனை திறக்க எதிர்பார்த்துள்ளோம்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினையானது இந்த நாட்டிலுள்ள மிகவும் பாரதூரமான பிரச்சினையாகும். எனவே, இதற்கு தீர்வு காண்படு என்பது எளிதான விடயமல்ல.

யுத்தத்தில் கணவர், பிள்ளைகளை இழந்த குடும்பங்கள் வாழ்வாதார பிரச்சினைகளை எதிர்கொண்டிருப்பதுடன், அவர்களுக்காக எவ்வித நிவாரணங்களும் கிடைக்கவில்லை என்பது ஒரு பாரிய பிரச்சினையாக காணப்படுகிறது.

எனவே, அவ்வாறான குடும்பங்களின் நலன்கள் கருதி உரிய நடவடிக்கை எடுப்பதற்கான முன்மொழிவுகளை நாம் அரசாங்கத்திற்கு முன்வைக்கவுள்ளோம்.

இங்குள்ள பலர் பல ஆண்டுகளாக தீர்வின்றி போராடிவருகின்றனர். அது உண்மை அதனை நான் ஏற்றுக் கொள்கின்றேன். உங்களது பிரச்சினைக்கு விரைவில் தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

ஆனால் இவ்விடயம் சற்று சிக்கலானது என்பதால் இப்பிரச்சினைக்கு உடனடி தீர்வை வழங்குவோம் என்ற பொய்யான வாக்குறுதியை முன்வைக்க முடியாது. ஆனால், எமது விசாரணைகள் பாரபட்சமின்றி சுயாதீனமாக முன்னெடுக்கப்படும் என்பதை உறுதியாகக் கூறுகின்றேன்” எனத் தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.