அன்வரின் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் வீரர்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வீரர் ஃபகர் ஜமான் சிறப்பாக ஆடி இரட்டைச் சதம் அடித்தார்.
ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் மூன்று போட்டிகளிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில் நான்காவது போட்டி புலவாயோ நகரில் இன்று (ஜூலை 20) தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய இமாம் உல் ஹக்-ஃபகர் ஜமான் ஜோடி ஜிம்பாப்வேயின் பந்துவீச்சை அடித்து நொறுக்கி அதிரடியில் இறங்கியது. சிறப்பாக விளையாடிய இருவரும் சதம் கடந்தனர். 42ஆவது ஓவரின் கடைசி பந்தில் பாகிஸ்தான் அணியின் முதல் விக்கெட் விழுந்தது. 122 பந்துகளில் 113 ரன்கள் சேர்த்து இமாம் உல் ஹக் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் ஃபகர் ஜமான் 148 பந்துகளில் இரட்டைச் சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் இரட்டைச் சதம் கடந்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆனார். இதற்கு முன்னதாக சயீத் அன்வர் அடித்த 194 ரன்களே அந்த அணியின் தனிநபர் அதிகபட்ச ரன்னாக இருந்தது.
50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 399 ரன்கள் குவித்தது. ஃபகர் ஜமான் 210 ரன்களுடனும் ஆசிப் அலி 50 ரன்களுடனும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்தப் போட்டியில் இரட்டைச் சதம் அடித்த ஃபகர் ஜமான், சர்வதேச அளவில் இரட்டைச் சதம் அடித்த ஆறாவது வீரராவார். இதற்கு முன் இரட்டைச் சதம் கடந்த வீரர்களின் பட்டியல்:

2010ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் வரலாற்றின் முதல் இரட்டை சதத்தைப் பதிவு செய்தார். குவாலியரில் நடைபெற்ற தென்னாப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் 200 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் விரேந்தர் சேவக், இரண்டாவது இரட்டைச் சதத்தை அடித்தார். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக இந்தூரில் நடைபெற்ற ஆட்டத்தில் சேவாக் 219 ரன்கள் குவித்தார்.

2013ஆம் ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியப் பந்துவீச்சுக்கு எதிராக ரோஹித் ஷர்மா 209 ரன்கள் குவித்தார்.

2014ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் ரோஹித் ஷர்மா 264 ரன்கள் குவித்தார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தனிநபரின் அதிகபட்ச ரன்கள் என்ற வரிசையில் இதுவே இன்று வரை முதலிடத்தில் உள்ளது.

2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் அணியைச் சேர்ந்த கிறிஸ் கெயில் 215 ரன்கள் எடுத்தார்.

அதே தொடரின் காலிறுதி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில் 237 ரன்கள் சேர்த்து அந்த அணியை அரையிறுதிக்குள் நுழையச் செய்தார்.

2017ஆம் ஆண்டு சண்டிகரில் நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக ரோஹித் ஷர்மா, ஒருநாள் அரங்கில் தனது மூன்றாவது இரட்டைச் சதத்தைப் பதிவு செய்தார். அந்தப் போட்டியில் அவர் 153 பந்துகளில் 208 ரன்கள் சேர்த்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை