சூர்யா படத்திலிருந்து விலகிய நடிகர்!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருந்த தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் விலகுவதாக அறிவித்துள்ளார்.


சூர்யா, சாயிஷா முதன்முறையாக இணைந்துள்ள படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கி நடைபெற்றது. ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ் தவிர மலையாளம், இந்தி, தெலுங்கு திரையுலக ரசிகர்களையும் கவரும் விதமாக ஒவ்வொரு மொழிகளில் இருந்தும் முன்னணி நாயகர்களை படக்குழுவில் இணைத்தனர். அதன் படி மலையாளத்தில் இருந்து மோகன் லாலும் தெலுங்கில் இருந்து அல்லு சிரிஷும் ஒப்பந்தமாகினர். இந்தியிலிருந்து பொமன் இராணி படக்குழுவுடன் இணைந்தார். இந்நிலையில் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அல்லு சிரிஷ் படத்திலிருந்து விலகுவதாக இன்று (ஜூலை 20) அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அல்லு சிரிஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “'ஏபிசிடி' படத்துக்காக தேதி ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இரு படங்களும் எனக்கு முக்கியமானவையே. படப்பிடிப்பு நாள்களை மாற்றவும் முடியாது. எனவே கே.வி.ஆனந்த் சார் படத்திலிருந்து விலகவேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்கும், இப்போது என் சூழலைப் புரிந்து கொண்டதற்கும் சூர்யா, கே.வி.ஆனந்த் மற்றும் லைகா நிறுவனம் ஆகியோருக்கு நன்றி. மீண்டும் வாய்ப்பு அமைந்தால் இணைந்து பணியாற்றுவோம். படக்குழுவுக்கு வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவாளராகவும், கிரண் கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.