பாகிஸ்தானில் மறு தேர்தல்?

பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் வெற்றி பெற்றுள்ள நிலையில் நேற்று (ஜூலை 27) எதிர்க்கட்சி சார்பில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீஃப் இ இன்சாஃப் கட்சி 118 இடங்களில் வெற்றி பெற்றது என்று தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. ஆனால் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 172 இடங்களை கைப்பற்றியிருக்க வேண்டும். எனவே, பெரும்பான்மை இல்லாத காரணத்தால் சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களின் ஆதரவுடன் இம்ரான் கான் ஆட்சியமைப்பார் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே நேற்று எதிர்க்கட்சியான முஸ்லிம் லீக் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது ஜமியாத் உலேமி-ஏ-இஸ்லாம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டன. அதில், “பாகிஸ்தானில் மறு தேர்தல் கொண்டு வர வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரிஃப், “ ஜூலை 25 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலை ரத்து செய்துவிட்டு மறு தேர்தல் நடத்த வேண்டும். இல்லை என்றால் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். தேர்தல் என்பது மக்களின் தீர்ப்பாக இருக்க வேண்டும். ஆனால், இங்கு மக்கள் தீர்ப்பு திருடப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
“பாகிஸ்தானில் ஜூலை 25 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல், அந்நாட்டின் அரசியல் சூழலாலும், பிரச்சாரத்தில் சமத்துவமின்மை இல்லாததாலும் எதிர்மறையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இது பிரச்சினைக்குரியது” என்று ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.