பிள்ளையானின் கட்சி உறுப்பினர்கள் ஐவருக்கு தடை!

மட்டக்களப்பு மாநகர சபையின் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு மட்டக்களப்பு மாநகர சபையின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர்கள் ஐந்து பேருக்கு ஒரு மாதகால தடை விதிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பான தீர்மானம் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களின் ஏகமனதான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையின் ஆறாவது அமர்வு மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.

பகல் உணவு நேரத்திற்கு பின்னர் சபை மீண்டும் ஆரம்பமானபோது, அண்மையில் மாநகரசபை முதல்வர் நியமனங்களில் தன்னிச்சையாக செயற்படுவதாக மட்டக்களப்பு மாநகரசபையின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர் செல்வி மனோகர் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பான ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதற்காக சபையினால் வாக்கெடுப்பு நடாத்தப்பட்டபோது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர்கள் ஐந்து பேரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் சபையின் செயற்பாடுகள் தொடர்பில் விமர்சனமும் செய்தனர்.

அதனைத்தொடர்ந்து குறித்த ஐந்து உறுப்பினர்களும் தாங்கள் வெளிநடப்பு செய்வதாக வெளியேறிச்சென்றனர்.

இதன்போது உறுப்பினர் செல்வி மனோகருக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர்கள் வெளியேறிச்சென்ற நிலையில் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன்போது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர்கள் சபை தொடர்பில் முறையற்ற வார்த்தை பிரயோகங்களை செய்தது தொடர்பிலும் சபை நடவடிக்கைக்கு பங்கம் ஏற்படுத்தியது தொடர்பிலும் உறுப்பினர்களினால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதுடன் குறித்த ஐந்து உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் குறித்த செய்தியை மூன்று தினங்களுக்குள் மீளப்பெறப்படவேண்டும் எனவும் அவ்வாறு செய்யாதபட்சத்தில் அவருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கையினை எடுப்பதற்காக சபையின் சிபாரிசினை கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் விடயங்களுக்கான அமைச்சர்,தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பிவைத்தல்,சபையினை அவமதித்ததற்காக நீதிமன்றில் வழக்கு தொடரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வாக்கெடுப்பு நடக்கும்போது வெளியேறியமை, கைகாட்டி கதைத்தமை, தகாத வார்த்தைகள் பாவிக்கப்பட்டமை, உறுப்பினர்களை பெயர்சூட்டி அழைத்தமை ஆகியவை தொடர்பில் 1929/01இன் 20ஆம் திகதிய 541/17ஆம் இலக்க சட்டத்தின் படி ஒரு மாதகால தடையுத்தரவினை நிறைவேற்றினால் அதனை அமுல்படுத்தலாம் என்று மாநகர முதல்வர் தெரிவித்ததுடன் அது இரகசிய வாக்கெடுப்பா, பகிரங்க வாக்கெடுப்பா என்று கோரியபோது பகிரங்க வாக்கெடுப்பு நடாத்த சபை தீர்மானித்தது.

இதன் அடிப்படையில் நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில் 32 உறுப்பினர்களில் 27பேர் ஆதரவாக வாக்களித்ததுடன் ஐந்து உறுப்பினர்கள் நடுநிலையினை வகித்தனர்.

இதடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர்கள் ஐந்து பேருக்கு ஒரு மாதகால தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் மக்கள் ஆணையைப்பெற்றுவந்தவர்கள் கௌரவமாகவும், நேர்மையாகவும் நடக்கவேண்டும் என்றே மட்டக்களப்பு மாநகர முதல்வரிடம் கூறிவருகின்றோம் என மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் செல்வி மனோகர் தெரிவித்தார்.

ஜனநாயகத்திற்கு விரோதமானதும் பொய்யான குற்றச்சாட்டுகளும் தம்மீது சுமத்தப்படுவதாக இங்கு கருத்து தெரிவித்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மற்றுமொரு உறுப்பினரான காந்தராஜா தெரிவித்தார்.

தாங்கள் தெரிவித்த கருத்தில் முரண்பாடுகள் இருக்குமானால் அவர்கள் அது தொடர்பில் ஊடகங்களுக்கு மறுப்பு தெரிவிக்காமல் தங்களை பழிவாங்குவதாகவும் இதன்போது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர்கள் ஐந்து பேரும் வெளியேறிச்சென்ற நிலையிலும் சபை அமர்வுகள் தொடர்ந்து நடைபெற்று நிறைவுபெற்றமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.