முதல்வர் மத்திய அரசின் முகவரா?

பசுமைச் சாலை அமைக்கும் திட்டம் மத்திய அரசின் திட்டம் என்றும், அத்திட்டத்திற்காக நிலங்களைக் கையகப்படுத்தித்
தருவது மட்டும்தான் மாநில அரசின் பணி என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்த நிலையில், முதல்வர் தமிழக மக்கள் பிரதிநிதியா, மத்திய அரசின் முகவரா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (ஜூலை 1) வெளியிட்டுள்ள அறிக்கையில், “பசுமைச் சாலை திட்டம் மத்திய அரசின் திட்டம் என்று இப்போது கூறும் எடப்பாடி பழனிசாமி சரியாக 20 நாட்களுக்கு முன் கூறியது என்னவென்று நினைத்துப் பார்க்க வேண்டும். கடந்த 11.06.2018 அன்று சட்டப்பேரவையில் இதுதொடர்பாக நடந்த விவாதத்தில் ஆவேசமாகக் குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர், ‘பசுமை வழிச்சாலை சென்னையில் இருந்து சேலம் வரை அமைப்பதிலே உங்களுக்கு என்ன கஷ்டம்? மத்திய அரசிடம் போராடி பெற்றிருக்கிறோம். எத்தனை எதிர்ப்பு வந்தாலும் இந்த சாலைத் திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம்’ என்று கூறியிருந்தார்.

ஆனால், அதற்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் இத்திட்டத்திற்காக நிலம் எடுத்துத் தருவதை தவிர மாநில அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று இப்போது கூறுகிறார். முதல்வரின் குரலும், நிலைப்பாடும் தளர்ந்து காணப்படுகிறது. மக்களின் எதிர்ப்பு காரணமாக இந்த மாற்றம் நிகழ்ந்திருந்தால் வரவேற்கத்தக்கதே” என்று தெரிவித்துள்ளார்.

சென்னை - சேலம் இடையிலான சாலை மத்திய அரசின் திட்டம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், மத்திய அரசின் திட்டம் தமிழகத்திற்கு வரும்போது, அதை மக்களின் நிலையிலிருந்து தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணுகியிருக்க வேண்டும் என்று கூறியுள்ள ராமதாஸ், “பசுமை வழிச் சாலையால் தனியார் நிறுவனத்தைத் தவிர வேறு யாருக்கும் பயன் இல்லை; அதேநேரத்தில் இச்சாலைக்காக 7000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவிருப்பதால் 7500 உழவர்கள் நிலங்களை இழப்பர்; 15,000க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் என்பன உள்ளிட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்டுதான் இத்திட்டத்தை ஏற்பதா, வேண்டாமா? என்று தமிழக அரசு முடிவு செய்திருக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

கேரளத்தில் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையிலான எந்தத் திட்டமும் அனுமதிக்கப்படுவதில்லை. கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்தை கேரளத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்டபோது அம்மாநில மக்களுடன் இணைந்து அரசும் எதிர்த்துத் தான் முறியடித்தது என்று குறிப்பிட்டுள்ள அவர், “இதுதான் மக்கள் நலன் காக்கும் அரசுக்கு அடையாளம் ஆகும். பசுமை வழிச் சாலை திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு தீர்மானித்து விட்டது. அதற்கான கோரிக்கை தமிழக அரசிடமிருந்து வர வேண்டும் என்பதால், அதற்கான அழுத்தம் தமிழக ஆட்சியாளர்களுக்குக் கொடுக்கப்பட்டது.

இதற்காகக் கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி சென்னையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பசுமைச் சாலைத் திட்டத்தை பாரத்மாலா திட்டத்தில் இணைத்து செயல்படுத்த வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுக்கிறார். அடுத்த 24 மணி நேரத்தில் அக்கோரிக்கை ஏற்கப்படுகிறது. அந்நேரத்தில்தான் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. அதுகுறித்தும் நிதின் கட்கரியிடம்தான் விவாதிக்க வேண்டும்; ஆனால், அதை முதல்வர் செய்யவில்லை” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

பசுமைச் சாலை விவகாரத்தைப் பொறுத்தவரை மத்திய அரசின் விருப்பத்தை நிறைவேற்றப் பாடுபடும் முகவராகத் தான் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டாரே தவிர, மக்கள் பிரதிநிதியாக செயல்படவில்லை என்று விமர்சித்துள்ள ராமதாஸ், “சென்னையிலிருந்து சேலம் செல்லும் இரு தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 2.57 கோடியாக அதிகரித்துவிட்டதாகவும், இதனால் விபத்து ஏற்படுவதைத் தடுக்கவே தொலைநோக்குப் பார்வையுடன் புதிய சாலை அமைக்கப்படுவதாக முதல்வர் கூறுகிறார். அவரது கூற்றுப்படியே பார்த்தாலும் இரு தேசிய நெடுஞ்சாலைகளிலும் சராசரியாக தினமும் 35,205 வாகனங்கள் மட்டுமே செல்கின்றன.

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையப் புள்ளிவிவரங்களின்படி இது 29,502 பயணியர் வாகனங்கள் மட்டுமே. அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட இது 44,794 என்ற அளவில் தான் இருக்கும். ஆனால், இரு நெடுஞ்சாலைகளிலும் தினமும் தலா 85,000 ஊர்திகள் வரை பயணிக்க முடியும். இந்த நிலையை எட்ட இன்னும் 30 ஆண்டுகளுக்கு மேலாகும். அவ்வாறு இருக்கும் போது இப்போது புதிய சாலை அமைக்க வேண்டும் என்பது தேவையற்ற, பணத்தை வீணடிக்கும் செயல்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆட்சி அதிகாரமும், காவல் துறையும் கைகளில் இருக்கும் அகந்தையில் மக்களை அடக்கி, இந்த சாலைத் திட்டத்தைச் செயல்படுத்தி விடலாம் என எடப்பாடி நினைத்தால் தோல்வியடைந்து விடுவார் என்று எச்சரித்துள்ள ராமதாஸ், “மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகள் அசைக்க முடியாத அளவுக்கு இடதுசாரி கூட்டணி ஆட்சி செய்தது. ஆனால், அடக்குமுறை மூலம் சிங்கூர் மற்றும் நந்திகிராமத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைக்கத் துடித்தது தான், ஆட்சிக் கட்டிலில் இருந்து இடதுசாரிகளைத் தூக்கி வீசியது என்பதைக் கொள்ளைப்புறத்தின் வழியாக ஆட்சிக்கு வந்த அரசு மறந்து விடக்கூடாது.

மக்கள் நலனில் பழனிசாமி அரசுக்கு அக்கறை இருந்தால் எட்டு வழிச் சாலைத் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது என்று மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும்; இதன் மூலம் மக்கள் அச்சத்தைப் போக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.