புதிய அரசியலமைப்பு–இந்தியாவிடம் வலியுறுத்திய சம்பந்தன்!

மாகாண சபைத் தேர்தல்களுக்கு முன்னதாக, புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு இந்தியாவின் ஆதரவு தேவை
என்றும் இந்திய வெளிவிவகாரச் செயலர் விஜய் கோகலேயிடம், வலியுறுத்தியுள்ளார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலர் விஜய் கோகலே, நேற்று மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்தப்புத் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“புதிய அரசியலமைப்பு மாகாணசபை தேர்தல்களுக்கு முன்பாக நிறைவேற்றப்பட வேண்டும்.

நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றமையினால் இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய அரசியலமைப்பு  நிறைவேற்றப்படுவது மிகவும் அவசியம்.பிரிக்க முடியாத இலங்கை நாட்டிற்குள்ளேயே நாம் தீர்வொன்றினை எதிர்பார்க்கிறோம்.

நாட்டில் நீண்டகால நிலவி வரும் தேசியப் பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பின் ஊடாகவே ஒரு தீர்வைக் காண முடியும்.

புதிய அரசியலமைப்பு மக்கள் தமது நாளாந்த விடயங்கள் குறித்து  தாமே நிர்ணயித்து  முடிவெடுக்கும் வகையில் அமைவது அவசியம். சிறிலங்கா – இந்திய ஒப்பந்தத்தில் உள்ளடங்கிய விடயங்களும் அதில் வலியுறுத்தப்பட்டிருக்க வேண்டும்.

சிறிலங்காவில் குறிப்பாக, வடக்கு- கிழக்கு மாகாணங்களில் இந்திய முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதனை இந்திய அரசாங்கம் ஊக்குவிக்க நடவடிக்கை எடுப்பதனூடாக வெளிநாட்டு முதலீடுகளினால் எமது மக்களின் பொருளாதாரம் மேம்படும் வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்றும் இந்திய வெளிவிவகாரச் செயலரிடம் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.” என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.