உதவி கமிஷனர் மீது நடிகை புகார்!

ஆடையைக் கழற்றி நிர்வாணமாக நிற்க வைத்து, போலீஸ் உதவி கமிஷனர் ஒருவர் விசாரணை நடத்தியதாக, பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை சுருதி புகார் கூறியுள்ளார்.

கோவை பாப்பநாயக்கன் பாளையம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் நடிகை சுருதி. ஆடிப் போனா ஆவணி, காசு பணம் துட்டு ஆகிய படங்களில் நடித்தவர். இரண்டு படங்களும் திரைக்கு வரவில்லை. இவர் திருமண ஆசை காட்டி ஐந்து இளைஞர்களிடம், 1 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக பிப்ரவரியில் கைது செய்யப்பட்டார்.

மோசடிக்கு உடந்தையாக இருந்த சுருதியின் தாயார், வளர்ப்புத் தந்தை, சகோதரர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஜாமீன் கிடைத்ததைத் தொடர்ந்து ஐந்து மாதங்களுக்குப் பின், ஜூலை 25ஆம் தேதி கோவை மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். தினமும் கோவை 3ஆம் எண் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு மற்றும் சைபர் க்ரைம் போலீஸில் காலையில் ஆஜராகி சுருதி கையெழுத்திட வேண்டும்.

நேற்று முன்தினம் (ஜூலை 27) கோவை நீதிமன்றத்தில் நிபந்தனை கையெழுத்திட வந்த சுருதி, அவரது வழக்கறிஞர் ஜக்காரியா அலுவலகத்தில் அளித்த பேட்டியில், “திருமண ஆசை காட்டி மோசடி செய்ததாக, போலீஸார் என்னை கைது செய்தனர். பொய் புகாரில் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என்னை கைது செய்த போது, ஏழு நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்தது. அப்போது , தனி அறையில் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்தனர்.



ஆடையைக் கழற்றி நிர்வாணமாக நிற்க வைத்து, போலீஸ் உதவி கமிஷனர் ஒருவர் மொபைல் போனில் போட்டோ எடுத்தார். எனது ஆடையைப் பிடித்து கழற்றும்போது அருகில் இருந்த மற்ற காவலர்கள் பார்த்துச் சிரித்தார்கள். இரண்டு பெண் இன்ஸ்பெக்டர்களும், என்னை தகாத வார்த்தையால் திட்டியதோடு, போலீஸ் அதிகாரியுடன் இரண்டு நாட்கள் அட்ஜஸ்ட் செய்யுமாறு கட்டாயப்படுத்தினர். இணக்கம் இருந்தால், வழக்கை ஒன்றும் இல்லாமல் செய்து விடுவோம் என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். அதற்குச் சம்மதிக்க மறுத்தால், ‘எப்படியும் நீ வெளியில் வருவே இல்லை, அப்ப உன்னை ரேப் பண்ணிக் கொன்று ரோட்டில் தூக்கி வீசிவிடுவோம். அதை விபத்து என்று வழக்கை முடித்துவிடுவோம்’ என்று மிரட்டினார்கள். இது பற்றி வெளியே சொன்னால், வாழ்க்கையைச் சீரழித்து விடுவோம் என்றனர்.

கஸ்டடி முடிந்து கோர்ட்டில் ஆஜர்படுத்திய போது, மாஜிஸ்திரேட் தம்பிராஜ் சாரிடம் பாலியல் சித்ரவதை குறித்து புகார் அளித்தேன். பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து , மனித உரிமை கமிஷனுக்கு புகார் அளிக்க உள்ளேன்” என்றார்.

இதற்கடுத்து அவரது வழக்கறிஞர் ஜக்காரியா பேசும் போது, “இந்த வழக்கு பொய் வழக்கா அல்லது உண்மையா என்பது நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும். நீதி மன்றம் முடிவு செய்வதற்கு முன் ஒருத்தரை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் நிர்வாணப்படுத்தி செக்ஸ் டார்ச்சர் செய்தால் எந்தவிதத்தில் நியாயம். ஒரு சின்ன பொண்ணு, அந்தப் பெண்ணின் வாழ்க்கையைப் பார்க்கவில்லை. அவளை நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்தி இருக்கிறார்கள். அவர்கள் வீட்டிலேயும் பெண்கள் இல்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.