முதல்வர் எழுப்பிய கேள்விகளுக்கு, அன்புமணி ராமதாஸ் விளக்கம்!

பாமக எம்பி அன்புமணிக்கு எதிராக முதல்வர் எழுப்பிய கேள்விகளுக்கு, அன்புமணி ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.

சேலம் போஸ் மைதானத்தில் அரசு பொருட்காட்சி தொடக்க விழா நேற்று (ஜூலை 29) மாலை நடந்தது. பொருட்காட்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “பாமக எம்பி அன்புமணி ராமதாஸ், மத்திய அமைச்சராக இருந்த போது இந்த மண்ணுக்கோ, இந்த மக்களுக்கோ என்ன செய்தார்? என்ன திட்டங்களை தந்து இந்த மக்களை வளர்த்தார்? இந்த மக்களைக் கொண்டு நீங்கள் வளர்ந்தீர்களே தவிர, உங்களால் இந்த மக்கள் வளர்ந்தார்களா?” என்று பல்வேறு கேள்விகளை பாமகவுக்கு எதிராகக் கேட்டிருந்தார்.

இதற்குப் பதில் அளிக்கும் விதமாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் பணத்தில் நடந்த அரசு விழாவில், அவரது சாதனைகளைப் பற்றிக் கூறுவதற்கு பதிலாக, எனது சாதனைகளைப் பற்றிக் கேட்கிறார் என்றால் அவரது மனம் அச்சத்தில் எந்த அளவுக்கு குழம்பிக் கிடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

“பூனை கண்களை மூடிக்கொண்டு பூலோகமே இருண்டு விட்டதாக நினைத்துக் கொண்டிருக்குமாம். அதேபோல் தான் மணல் கொள்ளை வருமானம், நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த ஊழல் ஆகியவை குறித்தே கண்களை மூடி ஜெபித்துக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு, தமிழக மக்களுக்காக நான் செயல்படுத்திய திட்டங்கள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

“2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடக்கூட இடம் கிடைக்காமலும், 2004ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் பாமக ஆதரவு திமுக வேட்பாளரிடமும், 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் பாமக வேட்பாளரிடமும் படுதோல்வி அடைந்து அரசியல் துறவறம் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமிக்கு நான் ஆற்றிய மக்கள் பணிகள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை” என தெரிவித்துள்ளார் அன்புமணி.

“உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டம் என்றால் அது தேசிய ஊரக சுகாதார இயக்கம் தான். இந்த திட்டத்தை 2005ஆம் ஆண்டில் நான் தான் தொடங்கினேன். இந்தத் திட்டத்தின்படி நான் பதவி வகித்த 5 ஆண்டுகளிலும், அதற்குப் பின்வந்த 9 ஆண்டுகளிலும் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை மட்டும் சுமார் ரூ.25,000 கோடி ஆகும். இந்த நிதியைக் கொண்டு தான், தமிழகத்தில் சீரழிந்து காணப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களும், அரசு மருத்துவமனைகளும் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றன.

கருவுற்ற தாய்மார்களுக்கு மகப்பேறு மருத்துவம் பார்க்க உதவுவதில் தொடங்கி முதலமைச்சரின் உயிரைக் காப்பது வரை அனைத்துக்கும் உதவுவது நான் தொடங்கி வைத்த 108 அவசர ஊர்தித் திட்டம் தான்.தமிழ்நாட்டில் 108 அவசர ஊர்தி சேவை தொடங்கப்பட்ட 2008ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஆண்டு வரை 9 ஆண்டுகளில் 25,000 குழந்தைகள் அவசர ஊர்தியில் பிறந்துள்ளன என்பதிலிருந்தே இதன் பயன்களை உணர முடியும். இந்த உண்மைகள் எல்லாம் பினாமி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவில்லை என்றால், அவர் பதவியில் நீடிக்க தகுதியற்றவர் என கூறியுள்ளார்.

சேலத்தில் 139 கோடியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவமனை நான் கொண்டு வந்த திட்டம் தான். முதலமைச்சரான பின்னர் பல முறை அந்த மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு செய்த எடப்பாடி, அம்மருத்துவமனையைக் கட்டியது யார்? என்ற வரலாற்றைக் கேட்டுத் தெரிந்திருக்க வேண்டாமா?

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த அறிவிப்பு வெளியானதையே தமது சாதனையாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால், சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்பே மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதுடன், அதற்காக ரூ.150 கோடி நிதியும் ஒதுக்கினேன். ஆனால், ஜெயலலிதா அரசு அதற்கான நிதியை வேறு திட்டங்களுக்கு செலவழித்து விட்டது என்று குற்றம்சாட்டிய அன்புமணி அப்போது மதுரையில் எய்ம்ஸ் அமைக்கப்பட்டிருந்தால் கடந்த 10 ஆண்டுகளில் அது விரிவாக்கம் செய்யப்பட்டு தென் மாநிலங்களின் மிகப்பெரிய மருத்துவமனை மற்றும் கல்லூரியாக உருவெடுத்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்கு பெருந்தீமையை ஏற்படுத்தும் குட்காவை தடை செய்தது நான் தான். ஆனால், தடை செய்யப்பட்ட குட்காவை விருப்பம் போல விற்பனை செய்து கொள்ள அனுமதித்து, அதற்காக கோடிக் கணக்கில் ஊழல் செய்து குவித்து வைத்திருப்பது பினாமி முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி.

சென்னையில் ரூ.100 கோடியில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்பு மையம். சென்னையில் ரூ.250 கோடியில் பிளாஸ்மா பிரிப்பு மையம். தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் மருந்து ஆய்வகம். சென்னையில் 112 கோடியில் மூத்த குடிமக்கள் கவனிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்.சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் குருத்தணு ஆய்வு மையம்.தமிழ்நாட்டில் ஹெச்.ஐ.வி. எய்ட்சை கட்டுப்படுத்த சிறப்புத் திட்டங்கள்.செங்கல்பட்டில் ரூ. 1,000 கோடியில் ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்திப் பூங்கா என்று தான் கொண்டு வந்த திட்டங்களை பட்டியலிட்டுள்ளார்.

தமிழகத்தில் நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள 3321 மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வரை சென்று போராடித் தீர்ப்பு பெற்றது பாமக. ஆனால், ஊரக ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்புகளை பாதிக்கும் நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்று வழக்கு நடத்தாத பினாமி அரசு, மதுக்கடைகளைத் திறப்பதற்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்குத் தொடர்ந்தது. மதுக்கடைகளை மூட வேண்டும் என்று போராடுவது தீமை. மதுக்கடைகளைத் திறக்க வேண்டும் என்று துடிப்பது தான் நன்மையா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

விவசாயிகளின் நிலங்களை 8 வழிச்சாலைக்காக பறித்துக் கொள்வதால் 15,000 உழவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று பாமக எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், யாருமே எதிர்க்கவில்லை என்று கூறி நிலங்களை வளைக்கிறது பினாமி அரசு, இதைத் தாங்க முடியாமல் திருவண்ணாமலை மாவட்டம் மேல்வடக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்ற விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். விவசாயிகளை வாழ வைக்க வேண்டும் என்று நாங்கள் நடத்தும் போராட்டம் தீமையானது. விவசாயிகளைத் தற்கொலைக்கு தூண்டுவது நன்மையா?

மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது மக்களுக்காக நான் செய்த பணிகள் என்ன? முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்த பணிகள் என்ன? என்பது குறித்து முதல்வருடன் விவாதம் நடத்த நான் தயாராக இருக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார் அன்புமணி.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.