தொடங்கப்படாத ஜியோ பல்கலைக்கு உலகத் தரச் சான்றிதழா?

உலகத் தரம் வாய்ந்த 500 பல்கலைக் கழகங்களின் பட்டியலில் இடம்பெறுவதற்கான இந்திய பல்கலைக் கழகங்களைத் தேர்வு செய்ய மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் சார்பில்
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சுவாமி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் முடிவுகளை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று அறிவித்தார்.
அதன்படி பெங்களூரு இந்திய அறிவியல் கல்வி நிறுவனம், மும்பை இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், தில்லி இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ஆகிய 3 அரசு நிறுவனங்களையும், பிட்ஸ் பிலானி, மணிப்பால் உயர்கல்வி நிறுவனம், ஜியோ பல்கலைக்கழகம் ஆகிய 3 தனியார் பல்கலைக் கழகங்களும் , ‘institute of eminence' எனப்படும் உலகத் தரம் வாய்ந்தவை என்ற தகுதிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன.
இந்தப் பட்டியலைக் கண்ட கல்வியாளர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். காரணம், இன்னும் தொடங்கப்படாத, முகவரி கூட இல்லாத, ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ பல்கலைக்கழகத்துக்கும் இந்தத் தகுதி வழங்கப்பட்டிருப்பதுதான்.
10 அரசுப் பல்கலைக்கழகங்கள், 10 தனியார் பல்கலைக்கழகங்கள் என மொத்தம் 20 நிறுவனங்களை உலகத்தர பல்கலைக்கழகங்களாக அறிவிக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி தலைமையிலான குழு 6 கல்வி நிலையங்களை மட்டுமே தேர்வு செய்திருக்கிறது. மீதமுள்ள 14 இடங்களுக்கு தகுதியான நிறுவனங்கள் கிடைக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
இன்னும் தொடங்கப்படாத ஜியோ பல்கலைக்கழகத்திற்கு உலகத்தர பல்கலை. தகுதி வழங்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், உயர்கல்வியில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் புதிய தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் இத்தகுதி வழங்க தீர்மானிக்கப்பட்டதாகவும், அதற்காக விண்ணப்பம் செய்த 11 நிறுவனங்களில் இருந்து ஜியோ தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் மத்திய அமைச்சரும், பாமக இளைஞரணித் தலைவருமான அன்புமணி,
“இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல் 5 நிறுவனங்களின் தகுதி குறித்து எந்த ஐயமும் இல்லை. ஆனால், ஆறாவதாக இடம் பெற்றுள்ள ஜியோ பல்கலைக்கழகத்துக்கு முகவரி கூட இல்லாத நிலையில் அதற்கு உலகத்தரத் தகுதி எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என்பது தான் கல்வியாளர்கள் எழுப்பும் வினா ஆகும்.
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம், தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், தில்லி பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்குக் கூட இத்தகுதி இல்லை என நிராகரிக்கப்பட்ட நிலையில், இன்னும் தொடங்கப்படாத ஜியோ பல்கலைக்கு அத்தகைய தகுதி இருப்பதை கோபாலசுவாமி குழு எவ்வாறு கண்டறிந்தது? 34 விழுக்காடு மதிப்பெண் பெற்ற மாணவனுக்கு தேர்ச்சி பெறத் தகுதி இல்லை என்று கூறிவிட்டு, தேர்வே எழுதாத மாணவனைத் தேர்ச்சி பெறச் செய்தால் அது எவ்வளவு அபத்தமானதாக இருக்குமோ, அதைவிட அபத்தமானதாகத் தான் இந்த தேர்வு அமைந்திருக்கிறது’’ என்று சுட்டிக் காட்டியுள்ளார்.
உலகத்தரம் வாய்ந்தவையாக அறிவிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு 5 ஆண்டுகளில் ரூ.1000 கோடி நிதி உதவி அளிக்கப்படும். இந்த பல்கலைக்கழகங்களை பல்கலைக்கழக மானியக்குழு, இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு உள்ளிட்ட எந்த ஒழுங்குமுறை அமைப்பும் கட்டுப்படுத்த முடியாது. மொத்த மாணவர்கள் எண்ணிக்கையில் 30% இடங்களை வெளிநாட்டவருக்கு ஒதுக்கி, விருப்பம் போல கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம். 25% அளவுக்கு வெளிநாட்டு பேராசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம். உலகின் 500 முன்னணி கல்வி நிறுவனங்களுடன் தன்னிச்சையாக ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
இந்த சலுகைகள் அனைத்தையும் தொடங்குபோதே அனுபவிப்பதற்காகத் தான் ரிலையன்ஸ் ஜியோ பல்கலைக்கழகத்திற்கு இந்த தகுதி வழங்கப்பட்டிருக்கிறது என்று சர்ச்சை வெடித்திருக்கிறது.
“ஒரு கல்வி நிறுவனம் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட வேண்டுமானால் அங்கு ஆராய்ச்சி மற்றும் புதுமைக் கண்டுபிடிப்பு சார்ந்த முதுநிலைக் கல்வி வழங்கப்பட வேண்டும்; குறைந்தது 10 ஆண்டுகளாக அக்கல்வி நிறுவனம் செயல்பட்டு வந்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 18 விதிமுறைகளை பல்கலைக்கழக மானியக்குழு வகுத்துள்ளது. அதன்படி நிகர்நிலைப் பல்கலையாகவே தகுதி பெற முடியாத ஜியோ கல்வி நிறுவனம் எப்படி உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகமாக முடியும்?
மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அர்ஜுன்சிங் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த போது, கோவை பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 14 பல்கலைக்கழகங்களை உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களாக அறிவித்து, அவற்றுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி மேம்படுத்துவது தான் மூலத் திட்டமாகும். அதன்பின் கிடப்பில் போடப்பட்ட அத்திட்டத்தை தான் நரேந்திர மோடி அரசு மாற்றியமைத்து தனியார் பல்கலைக்கழகங்களுக்கு சாதகமாக செயல்படுத்த துடிக்கிறது.
இதனால் பல்கலைக்கழக மேம்பாட்டுக்கு ஏற்படும் நன்மைகளை விட தீமைகளே அதிகமாகும்.
எனவே, ஒரு சில பல்கலைக்கழகங்களை மட்டும் மேம்படுத்தும் திட்டத்தை கைவிட்டு, ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு பல்கலைக்கழகத்தை தேர்வு செய்து, அதை மாநில அரசுகளின் உதவியுடன் மேம்படுத்தும் முந்தைய அரசின் திட்டத்தையே செயல்படுத்த நரேந்திர மோடி அரசு முன்வர வேண்டும்” என்று யோசனை கூறியுள்ளார் அன்புமணி.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.