ராமாயணத்தை விமர்சித்த நடிகருக்கு தண்டனை!

ராமாயணத்தை விமர்சித்ததால் நடிகர் கத்தி மகேஷ் என்பவருக்கு, 6 மாதங்கள் ஹைதராபாதுக்குள் வரக் கூடாது எனத்
தடைவிதிக்கப்பட்டதாக தெலுங்கானா போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டில் ஒளிபரப்பப்பட்ட தெலுங்கு பிக் பாஸ் நிகழச்சியில் பங்கேற்றவர் கத்தி மகேஷ். தலித் செயல்பாட்டாளரான மகேஷ் பல தொலைக்காட்சி விவாதங்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுவருபவர். சமீபத்தில் நடந்த தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினர். அப்போது காலா படத்தில் வரும் ராவணன் தொடர்பான கருத்துக்களைப் பேசினார். ராமாயணத்தை விமர்சித்தும் சில கருத்துக்களைக் கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சி இந்து மத உணர்வுகளைப் புண்படுத்திவிட்டதாக மடாதிபதி பரிபூராணந்தா அறிக்கை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து இந்துத்துவ அமைப்பு பஜ்ரங்தளம் கொடுத்த புகாரின் அடிப்படையில் மகேஷைக் கைது செய்து அவரின் சொந்த ஊரான சித்துாருக்குக் கொண்டு சென்று அவரது வீட்டில் இறக்கி, வீட்டுக் காவலில் வைத்துள்ளனர்.
இது தொடர்பாக ஹைதராபாதில் இன்று (10.7.18) போலீஸ் டிஜிபி மகேந்தர் ரெட்டி பத்திரிகையாளர்களிடம் பேசியபோது கூறியதாவது:
கடந்த மாதத்தில் இந்துத்துவ அமைப்பான பஜ்ரங் தளம், தெலுங்கு நடிகரும் சினிமா விமர்சகருமான கத்தி மகேஷ் என்பவர் மீது போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அந்தப் புகாரில்,கத்தி மகேஷ் ராமாயணத்தைக் கீழ்த்தரமான முறையிலும், தாக்கும் தன்மையிலும் விமர்சனம் செய்துள்ளார். தொலைக்காட்சி விவாதத்தின்போது இவ்வாறு பேசியுள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில்,மகேஷ் மீது இந்திய தண்டனைச்சட்டத்தின் பிரிவு 295-ஏ-இன்படி,மத உணர்வுகளைப் புண்படுத்துதல் குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது. தெலுங்கானா சமூக விரோத மற்றும் தீங்கு விளைவிக்கக்கூடிய நடவடிக்கைகள் சட்டத்தின்படி மகேஷ் ஹைதராபாதுக்குள் 6 மாதத்திற்கு நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த விவாதத்தை நடத்திய தொலைக்காட்சிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மகேஷிற்கு இப்படித் தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு மனித உரிமை ஆர்வலர்களும் கல்வியாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மனித உரிமைக் காவலரும், கல்வியாளருமான ஜி.ஹரகோபால் கூறுகையில், கருத்து வேறுபாடு கொள்ளவும் எதிர்க் கருத்துக்களை கூறவும் உரிமை உள்ள ஒருவரைப் பாதுகாக்க வேண்டிய போலீசார் அதற்கு நேர் எதிராக, அரசியல் சட்டத்தில் அளிக்கப்பட்ட கருத்துரிமை மற்றும் பேச்சுரிமையைப் பயன்படுத்துபவர் மீது வழக்குத் தொடர்ந்து அரசியல் சட்டத்தை மீறியுள்ளனர். இந்துத்துவ அமைப்புகள் இந்து மத உணர்வுகளைப் பயன்படுத்தி ஜனநாயகத்தைச் சீர்குலைக்கின்றன. இது மிகவும் வருந்தத்தக்கது; அபாயகரமானது என்று தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.