இராணுவத் தேவைக்கு மத்தல விமான நிலையத்தை இந்தியா பயன்படுத்த முடியாது !

மத்தல விமான நிலையத்தை இராணுவத் தேவைகளுக்காகப் பயன்படுத்த
இந்தியாவுக்கு அனுமதி அளிக்கப்படாது என்று சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் மத்தல விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள முடிவு ஆபத்தானது என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளியிட்ட கருத்துக்குப் பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
“மத்தல விமான நிலையத்தின் 70 வீத பங்குகளை இந்தியாவுக்கு வழங்கி, கூட்டு முயற்சியாக இயக்குவது பற்றிய பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் இணக்கப்பாட்டுக் குழு என்பன, தேசிய பாதுகாப்பு மற்றும் விமான நிலையப் பணியாளர்களின் எதிர்காலம் தொடர்பான பரிந்துரைகளை வழங்கும்.
இணக்கப்பாடுகள் ஏற்பட்டதும், இந்தியாவுடனான உடன்பாடு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.
விமான நிலையத்தை முற்றாக இந்தியாவிடம் கையளிப்பதானால், சிவில் விமான சேவைகள் சட்டத்தில் நாடாளுமன்றத்தின் மூலம் திருத்தங்கள் செய்ய வேண்டும். அதனை எவரும் எதிர்க்கலாம். நாடாளுமன்றத்தில் தோற்கடிக்க முடியும்.
விமான நிலையத்தை பரிமாற்றம் செய்ய முன்னர் நாங்கள் முன்நிபந்தனைகளை விதித்துள்ளோம்.
இது ஒரு வணிக முயற்சி மாத்திரமே. எந்தவொரு இராணுவச் செயற்பாடுகளுக்கும் எவரும் இதனைப் பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம்.
வான் போக்குவரத்து முறையை சிறிலங்கா அதிகாரிகளே கட்டுப்படுத்துவார்கள்.
சிறிலங்கா விமானப்படையும் உள்ளூர் பங்காளர்களுமே விமான நிலையத்துக்கு பாதுகாப்பு வழங்குவர்” என்றும் தெரிவித்தார்

No comments

Powered by Blogger.