திருட்டுவழியில் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி முன்னெடுப்பு!

புதிய அரசியலமைப்பை திருட்டுவழியில் இயற்றுவதற்குரிய முயற்சியில் சுமந்திரன், ஜயம்பதி விக்கிரமரட்ன ஆகிய எம்.பிக்கள் ஈடுபட்டுவருகின்றனர் என்றும், நிபுணர்கள் குழுவுக்குக்கூட அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது என்றும் மஹிந்த அணியின் எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், இவ்விடயம் தொடர்பில் சபாநாயகர் உடனடியாக கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமெனவும் வலியுறுத்தினர்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத் தாக்கல் உட்பட தினப்பணிகள் முடிவடைந்த பின்னர் ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய தயாசிறி ஜயசேகர,

"புதிய அரசியலமைப்பு தொடர்பான கலந்துரையாடலை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுசெல்வதற்குரிய அடிப்படை ஆவணத்தைத் தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவில் 10 பேர் அங்கம் வகிக்கின்றனர்.

ஜயம்பதியால் நேற்றுமுன்தினம் (18 ஆம் திகதி) சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் ஆறு பேர் மாத்திரமே கையொப்பமிட்டுள்ளனர். நால்வர் கையொப்பமிடவில்லை.

சுமந்திரன், ஜயம்பதி, சுரேன் பெர்னாண்டோ ஆகிய மூவரும் இணைந்தே வரைபு நகலை தயாரித்துள்ளனர். நிபுணர்கள் குழுவின் கருத்து உள்வாங்கப்படவில்லை. அதுமட்டுமல்ல, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூவரும் இணைந்து ஜனாதிபதியை நீக்கமுடியும் என்ற சரத்தையும் உட்புகுத்தியுள்ளனர்.

மூன்று பேரால் எவ்வாறு புதிய அரசியலமைப்பை உருவாக்கமுடியும்? நாட்டுக்கும், பெரும்பாலான மக்கள் விரும்பும் வகையிலுமே அரசியலமைப்பு உருவாக்கப்படவேண்டும். அதற்குப் புறம்பாக நடவடிக்கை இடம்பெறுமாயின் அதற்கு ஒத்துழைப்பு வழங்கமுடியாது'' என்று சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து கருத்து வெளியிட்ட மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி.,

"நிபுணர்கள் குழுவில் கையொப்பமிட்டுள்ள நபரொருவர் ஆறு மாதங்களாக இலங்கை வரவே இல்லை. அவரின் ஒப்பமானது திருட்டுத்தனமாகப் போடப்பட்டுள்ளது. சுமந்திரனும் மற்றைய எம்.பியொருவருமே இதைச் செய்ததாக நிபுணர்கள் குழுவின் உறுப்பினரொருவர் கூறினார். இது தவறான செயலாகும்'' என்று தெரிவித்தார்.

அதன்பின்னர் கருத்து வெளியிட்ட தினேஷ் குணவர்தன எம்.பி.,

"இதை சாதாரண விடயமாகக் கருதிவிடமுடியாது. பாரதூரமான பிரச்சினையாகும். எனவே, இதுவிடயத்தில் மௌனமாக இருந்துவிடமுடியாது. அரசியலமைப்பு தொடர்பான சட்டமூலம் ஜூலை 18இல் சமர்ப்பிக்கப்படும் என ஜயம்பதி கூறியிருந்தார். இதன்படி நேற்று(நேற்றுமுன்தினம்) நடைபெற்ற கூட்டத்தில் அது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சுமந்திரன், ஜயம்பதி, சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ ஆகிய மூவரும் இணைந்தே சட்டமூலத்தை தயாரித்துள்ளனர் என நிபுணர்கள் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.

நிபுணர்கள் குழுக்களிடையே கருத்து முரண்பாடு இருந்துள்ளது. அனைவரையும் கையொப்பமிடுமாறு இவ்விரு எம்.பிக்களே அறிவுறுத்தியுள்ளனர். திருட்டு வழியில் அரசியலமைப்பைத் தயாரிக்கும் முயற்சியாகவே இது அமைந்துள்ளது.

நிபுணர்கள் குழுவும் புறந்தள்ளப்பட்டுள்ளது. இருவர் குறுக்கு வழியில் பயணிக்கின்றனர் என்பது அம்பலமாகியுள்ளது'' என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.