நா.முத்துக்குமாரின் கடைசி பாடல்!

பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பிறந்த நாளான நேற்று, இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான ராஜிவ் மேனன் தனது படத்தில் இடம் பெறும் பாடல்தான் முத்துக்குமாரின் இறுதிப்பாடல் என தெரிவித்துள்ளார்.


காஞ்சிபுரத்தில் இருந்து சினிமா இயக்குநராக வேண்டும் என்ற கனவோடு சென்னை வந்தவர் பாடலாசிரியர் நா.முத்துக்குமார். சென்னையில் இயக்குநர் அருண் மொழியின் அறிமுகம் கிடைக்க அவரோடு இணைந்து பல உலக சினிமாக்கள் பார்த்தவருக்கு, அதற்கு முன் இருந்த சினிமாவின் பார்வை மாறி, பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்ற ஆரம்பித்தார். சினிமாவுக்குப் பாடல் எழுதப்போகிறேன் என பாலுமகேந்திராவிடம் சொன்னதும், அவருக்குக் கொஞ்சம் வருத்தம். ஆனாலும் வாழ்த்தி அனுப்பினார்.

சீமானால் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தப்பட்டு, தமிழுக்கே பெருமை சேர்த்தவர் நா.முத்துக்குமார். இவரின் வரிகள், பலருக்கு வாழ்க்கை கொடுத்தன. பலரைக் கண்ணீர் உகுக்கவைத்தன... நம்பிக்கை விதைகள் தெளித்தன. சுமார் 1,500 திரைப்பட பாடல்கள் மட்டுல்லாது தூசிகள், நியூட்டனின் மூன்றாம் விதி, பட்டாம்பூச்சி விற்பவன், போன்ற பல கவிதை தொகுப்புகளையும், சில்க்சிட்டி என்ற நாவலையும் எழுதியுள்ளார்.

தேசிய விருதுகள், மாநில விருதுகள் என எத்தனையோ பாராட்டுகள் கிடைத்தாலும் அகலமாக வாய் திறந்துகூட சிரிக்காமல் அமைதிப் புன்னகைக்கும் முகம்தான் நா.முத்துக்குமாரின் அடையாளம். இறந்த பிறகும் வாழும் வரம் சிலருக்கு மட்டும்தான் கிடைத்து விடுகிறது. அப்படி நா.முத்துக்குமாரின் கவிதை வரிகள் அவரின் இருப்பை நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கும்.

அந்த வகையில் அவர் கடைசியாக எழுதிய பாடல் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கிறது. ராஜிவ் மேனன் இயக்கி வரும் சர்வம் தாள மையம் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் அப்பாடல் குறித்து, “நா.முத்துகுமார் பிறந்த நாளில் நினைவு கூறுகிறோம். கடைசியாக எழுதிய பாடல் எங்கள் படத்தில் இருப்பதை அதிர்ஷ்டமாக பார்க்கிறோம். காலத்தால் அழியாத வரிகள் மற்றும் மரணத்தால் அழியாத பாடல்களை படைத்தவர்” என ராஜிவ் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Powered by Blogger.