எதிரிகள் கூட கூட்டணிக்கு வரலாம்: அமைச்சர்!

தேர்தல் காலங்களில் எதிரியாக இருப்பவர்கள் கூட கூட்டணிக்கு வரலாம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.


கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் இன்று (ஜூலை 13) செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “தேர்தல் காலங்களில்தான் கூட்டணி குறித்து பேச முடியும். சில பேர் கூடவே இருந்தாலும் சீட் பிரச்னையால் பிரிந்துபோக வாய்ப்புள்ளது. எனவே, கூட்டணி என்பதை இப்போதே முடிவு செய்ய முடியாது. எதிராக இருப்பவர்கள் கூட கூட்டணியில் சேர வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும், மத்தியில் உள்ள மோடி அரசும் மாநிலத்தில் உள்ள எடப்பாடி அரசும் இணக்கமாக உள்ளன. எங்களுக்கு சாதகமான நிறையத் திட்டங்களை மத்திய அரசு வழங்கியுள்ளது. எட்டுவழிச் சாலை திட்டமும் அதில் அடங்கும். மதுரையில் பஸ்போர்ட் அமைக்கப்படவுள்ளது. இந்தத் திட்டங்கள் எல்லாம் வரும்போது மதுரை சிட்னி நகர்போல் உயரும் என்று தெரிவித்தேன். இதை வைத்து மீம்ஸ் போட்டு வருகிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

“எதிர்க்கட்சிகளால் குறைபாடு சொல்ல முடியாத அரசாக எடப்பாடி பழனிசாமியின் அரசு உள்ளது. நமது முதல்வர் மிகவும் எளிமையானவர். கோப்புகளை உடனுக்குடன் கவனித்து தீர்வு காணுகிறார். ஜெயலலிதா கூறியதுபோன்று இன்னும் 100 ஆண்டுகள் அண்ணா திராவிட கழகம் ஆட்சி செய்யும். அமைச்சர்கள் யாருக்கும் பந்தா கிடையாது. சாதாரண தொண்டர்களை போல்தான் இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
Powered by Blogger.