நூல்களைக் கொண்டாடும் கவிஞர்!

கவிஞர் இளையபாரதி எழுத்துப் பணிகளுக்கிடையில் பதிப்புத் துறையிலும் இருபத்து நான்கு ஆண்டுகளாக இயங்கி வருகிறார். இவரது ‘வ.உ.சி நூலகம்’ பதிப்பகத்தின் பதினைந்தாவது ஆண்டு
விழா மற்றும் இருபது நூல்கள் வெளியீட்டு விழா நாளை (ஜூலை 14) மாலை சென்னை அடையாறில் உள்ள திருவாவடுதுறை ராஜரத்தினம் அரங்கில் நடைபெறவுள்ளது.
தமிழின் இடைநிலை இதழ்களுக்கு முன்னோடியாக விளங்கிய ‘சுபமங்களா’ மாத இதழில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர் இளையபாரதி. புதுமைப்பித்தன் தனது மனைவிக்கு எழுதிய கடிதங்களை ‘கண்மணி கமலாவுக்கு’ என்ற தலைப்பில்தொகுத்து வெளியிட்டது தமிழ்ப் பதிப்புலகில் இவரது முக்கியப் பணிகளில் ஒன்றாகும். தொடர்ந்து எழுத்து, பதிப்பு, திரைப்படம் என பலதுறைகளில் இயங்கிவரும் இளையபாரதி வஉசி நூலகத்தை வெற்றிகரமாகப் பதினைந்து ஆண்டுகளாகநடத்திவருவதோடு தமிழிலக்கிய உலகிற்கு முக்கியமான பல படைப்புகள் கிடைக்கக் காரணமாக இருந்துள்ளார். அதோடு பல இளம் கவிஞர்களைக் கவிதை விழாக்களில் பங்கு பெறச் செய்துள்ளார்.
க்ரியா, கண்ணதாசன், வானதி, நர்மதா, கவிதா உள்ளிட்ட பதிப்பகங்கள் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் செயலாற்றிவருகின்றன. நவீன இலக்கியப் பரப்பில் காலச்சுவடு, உயிர்மை, அடையாளம், பாரதி புத்தகாலயம் உள்ளிட்ட பதிப்பகங்கள் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவருகின்றன. படைப்பாளியாகவும் பதிப்பாசிரியராகவும் விளங்கும் வெகு சிலரில் ஒருவர் இளையபாரதி.
வஉசி நூலகத்தின் பதினைந்தாவது ஆண்டு விழாவை முன்னிட்டு இருபது நூல்கள் வெளியிடப்படவுள்ளன. முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர்.எஸ்.ஜெகத்ரட்சகன் தலைமை வகிக்க திமுக மகளிரணிச் செயலாளரும் நாடாளுமன்றக் குழுத்தலைவருமான கவிஞர் கனிமொழி நூல்களை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றுக்கிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், எழுத்தாளர் சா.கந்தசாமி, எழுத்தாளர் கலாப்ரியா, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.ராஜேந்திரன், நியூஸ் 18 சீனியர் எடிட்டர் எம்குணசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். முன்னதாக கவிஞர் இளையபாரதி வரவேற்புரை ஆற்றுகிறார். கவிஞர் கல்யாண்ஜி ஏற்புரை வழங்குகிறார். இரா.தெ.முத்து நன்றி தெரிவிக்கிறார்.
மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி, பெ.கஜபதி, தி இந்து இதழின் ரீடர்ஸ் எடிட்டர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன், ஏ.பி.ரவிவர்மா, கவிஞர் காசிமுத்து மாணிக்கம், புதுமைப்பித்தனின் மகள் தினகரி சொக்கலிங்கம், கிரி கிருபாசங்கர், பல்லவராஜா, சோழநாச்சியார் ராஜசேகர், தமிழ்ச் செல்வன், தஞ்சை எம்.வெங்கடேஷ்குமார், நா.வெங்கடேஷ், முத்தமிழ் விரும்பி, டாக்டர் ஆற்காடு வீ.கலாநிதி, ஆர் இளங்கோவன், க.ஆனந்தன்.நெய்வேலி ஆர்.ரமேஷ், டாக்டர் ஏ.பி.பூர்ணிமா, முரசொலி சிங்காரம்,சிதம்பரம் கே.செல்வம், வி.பி.மணி, கே.வி.சிட்டிபாபு, இரா.கார்த்திகேயன், ஜி.ராஜேந்திரன், வி.பி.குமார், தஞ்சை செழியன், சந்தியா நடராஜன் ஆகிய ஆளுமைகள் நூல்களின் முதற்பிரதியைப் பெற்றுக்கொள்கின்றனர். சித்ரா பாலசுப்ரமணியன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.
தன் வாழ்வின் பெரும் பகுதியைப் புத்தகங்களுடனே அமைத்துக்கொண்ட கவிஞர் இளையபாரதி புத்தகங்களைக் கொண்டாடும் விதமாகத் தொடர்ச்சியாக இயங்கிவருவதின் அடையாளமாகவே இந்த இருபது நூல்களின் வெளியீடுஅமைந்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.