மூட நம்பிக்கையை ஒழிக்க அரசியலுக்கு வரவில்லை: கமல்!

தான் அரசியலுக்கு வந்தது மூட நம்பிக்கையை ஒழிக்க அல்ல, ஏழ்மையையும் ஊழலையுமே என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


மதுரையில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “ பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிவிட்டு ஒருவர் மய்யம் என்ற கட்சியை நடத்துகிறார். கட்சியை ஆரம்பித்ததும் அமாவாசை அன்றுதான் கட்சி கொடியை ஏற்றியதும் அமாவாசை அன்றுதான். இப்படிப்பட்ட போலி பகுத்தறிவுவாதிகள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றனர்” என்று கமல்ஹாசனை விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூலை 13) மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் தமிழிசை சௌந்தரராஜனின் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “பல்வேறு தரப்பினரும் பல்வேறு மதத்தினரும் நம்பிக்கையை உடையவர்களும் என் கட்சியில் உள்ளனர். என் மகள் ஸ்ருதியைப் பகுத்தறிவுவாதி என்று கூற முடியாது. பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்பி மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்கு மட்டும் நான் கட்சி ஆரம்பித்திருந்தால் தவறாகக் கூறலாம். ஆனால், ஏழ்மையையும் ஊழலையும் ஒழிப்பதற்காக நான் வந்திருக்கிறேன். அதற்கு எல்லோர் உதவியும் தேவைப்படுகிறது” என்று குறிப்பிட்டார்.

நேற்றைய கொடி ஏற்று நிகழ்ச்சியில் ஆழ்வார்பேட்டை ஆண்டவரே என்று கோஷம் எழுப்பப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதே என்ற கேள்விக்கு, “ஆம், சர்ச்சைதான். இது பழையக் கூக்குரல், தவிர்க்கத்தான் வேண்டும். அது தொடர்பாக வந்த விமர்சனங்கள் எல்லாம் சரியானவையே. இதைத் தவிர்ப்பதற்கு எல்லா முயற்சிகளையும் எடுத்துவருகிறேன். இனி இதுபோன்று நிகழாது என்று வாக்குறுதி அளிக்கிறேன். மற்றபடி அந்த நிகழ்வுக்கு நான் பொறுப்பல்ல. என்னுடைய கட்சியில் இருப்பவர்கள் இதற்கு ஏற்பாடு செய்திருந்தால் அவர்களைக் கண்டிக்கிறேன்” என்று பதிலளித்தார்.

சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் இரண்டையும் ஒன்றாக நடத்துவதில் எங்களுக்கு விருப்பமில்லை. ஒரே குவியலாக இருக்கக் கூடாது என்பதுதான் எங்களின் கருத்து என்றும் அவர் குறிப்பிட்டார்.

முட்டை முறைகேடு தொடர்பான கேள்விக்கு, “முட்டை முறைகேடு விவகாரத்தில் ஒரு ஆண்டுக்கு முன்பாகவே எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சுட்டிக்காட்டினர். அப்போது, இது பொய்க் குற்றச்சாட்டு என்று கூறியவர்கள்தான் தற்போது மாட்டியுள்ளனர். அதைத் தொடர்ந்து செய்துவருகின்றனர். இதையெல்லாம் ஒழிப்பதுதான் முக்கிய வேலையாக எங்களுக்குத் தோன்றுகிறது” என்று பதிலளித்த அவர், கோவையில் நிகழ்ந்த மாணவியின் மரணம் கண்டிக்கத்தக்க ஒன்று என்றும் கல்வி நிறுவனங்களின் உயரம் வளர்ந்தால் மட்டும் போதாது, கல்வியின் தரமும் உயர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.