அமித் ஷாவிடம் ஊழல் அமைச்சர்கள் லிஸ்ட்!

மொபைல் டேட்டா ஆனில் இருக்க, வாட்ஸ் அப்பில் மெசேஜ் டைப்பிங் ஆனபடியே இருந்தது.

"பாஜக தலைவர் அமித் ஷாவின் சென்னை பயணத்தை பற்றியும் நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்தவற்றையும் நேற்றைய டிஜிட்டல் திண்ணையில் சொல்லியிருந்தேன். அதன் பிறகு நேற்று இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் அமித் ஷா அப்படியொரு வெடியைக் கொளுத்திப் போடுவார் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் ஊழல் அதிகம் உள்ளது. தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதுதான் அமித் ஷா வைத்த வெடி. அதிமுகவை சிறகில் வைத்து பாதுகாத்து வந்த பாஜக திடீரென அதிமுகவை இந்த அளவுக்கு தூக்கிப் போட்டு மிதிக்க என்ன காரணம் என்பதை விசாரித்தோம்.
‘அமித் ஷா சென்னைக்கு வருவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே அவரது டீமில் இருந்து நான்கு பேர் சென்னைக்கு வந்துவிட்டனர். கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த அவர்கள், தமிழக அரசியல் சூழ்நிலைப் பற்றிய முழுமையான ரிப்போர்ட் தயார் செய்தார்களாம்.
அவர்களது ரிப்போர்ட்டில், ‘தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் அதிமுக நம் கட்டுப்பாட்டில் இல்லை. அங்கே எடப்பாடி பழனிசாமி சொல்வதையே கேட்கும் நிலையில் அமைச்சர்கள் இல்லை. ஒவ்வொருவரும் சம்பாதிப்பதில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் அமைச்சர்கள் வீட்டுக்கு நாளைக்கு ரெய்டு போனால்கூட அத்தனை பேரும் சிக்குவார்கள்.
தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எதிராக மக்களை திசை திருப்புவதே அதிமுகதான். கடந்த முறை பிரதமர் வந்த போது தமிழகத்தில் மோடியே திரும்பிப் போ என்ற கோஷம் சமூக வலைத்தளங்களில் எதிரொலித்தது. அதற்கு எந்த நடவடிக்கையும் எடப்பாடி அரசு எடுக்கவில்லை. இப்போதும் அமித் ஷாஜி வரும்போதும் அதேபோல சமூக வலைத்தளங்களில் பதிவிட ஆரம்பித்துவிட்டனர். இப்போதும் அமைதியாக வேடிக்கைதான் பார்க்கிறது அரசு. அவர்களுக்கு நம்மோடு கூட்டணி வைக்கவும் விருப்பம் இல்லை. நாம் தமிழகத்தில் காலூன்றுவதிலும் விருப்பம் இல்லை. இதுவரை நாங்கள் எடுத்த ரிப்போர்ட்படி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் 6 தொகுதிகளில் உறுதியாக ஜெயிக்கலாம். அதை இன்னும் அதிகரிக்க வேண்டுமானால் கூட்டணி தேவை. அது அதிமுகவுடன் என்பது அவசியம் இல்லை. வேறு யாருடன் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், தமிழகத்தில் இனி அதிமுக தொடர வேண்டுமானால் அதற்கு நம் தயவு தேவை. அதைப் பற்றிய கவலை கொஞ்சமும் அதிமுகவுக்கு இல்லை’ என்று தெரிவித்துள்ளனர்.
இந்த விவரங்கள் அமித் ஷா சென்னைக்கு வருவதற்கு முன்பே அவரது கைக்குப் போயிருக்கிறது. சென்னைக்கு வந்த பிறகு அதிமுக அரசு பற்றி, தமிழிசையும் சில விஷயங்களை வருத்தத்துடன் பதிவு செய்திருக்கிறார். எல்லாம் சேர்த்துதான் மேடையில் தமிழக அரசு ஊழல் அரசு என எடுத்த எடுப்பிலேயே பொங்கிவிட்டார் அமித் ஷா” என்று முடிந்த மெசேஜ்க்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப். அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக். தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றையும் பதிவிட்டது.
“அமித் ஷா வருகைக்கு முன்பாக சென்னைக்கு வந்த டீம், அவர் டெல்லி திரும்பிய பிறகும் இன்னும் சென்னையில்தான் இருக்கிறது. ’தமிழ்நாட்டில் எந்த அமைச்சர்கள் எல்லாம் ஊழலில் அதிகம் சம்பாதிச்சுட்டு இருக்காங்க. டாப் 5 மினிஸ்டர்ஸ் லிஸ்ட் எனக்கு வேணும்..’ என சென்னையில் இருந்து கிளம்பும் போது அந்த டீம்க்கு அசைன்மெண்ட் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார் அமித் ஷா. அவர்களும் அமைச்சர்களின் நதிமூலம் ரிஷிமூலத்தை தோண்ட ஆரம்பித்துவிட்டனர். கோவைக்கு விரைந்திருக்கும் அந்த டீம், கொங்கு மண்டலத்தில் இருந்தே விசாரணையை ஆரம்பித்திருக்கிறது.
அமைச்சர்கள் வேலுமணி,தங்கமணி, அன்பழகன், ஆர்.பி.உதயகுமார் ஆகியோரின் சொத்து விபரங்களைத்தான் முதலில் மோப்பம் பிடிக்க ஆரம்பித்துள்ளது அந்த டீம். முதலில் இவர்களது சொத்து விபரங்கள், வரவு- செலவுகளை கண்காணித்து ஒரு ரிப்போர்ட் ரெடியாகிறதாம். அதன் பிறகு ஒவ்வொரு அமைச்சராக விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப் போகிறார்களாம். டெல்லியோடு நெருக்கம் காட்டி வரும் காவல் துறை உயரதிகாரி ஒருவரும் இந்த ஆபரேஷனுக்கு உதவி செய்து வருகிறாராம். ஊழலில் ஊறிப்போன முதல் 5 அமைச்சர்களின் முதல் கட்டப் பட்டியல் அமித் ஷாவிடம் ஆதாரங்களோடு வந்ததும் அடுத்த ஆபரேஷன் ஆரம்பம் ஆகுமாம்!” என்பதுதான் அந்த ஸ்டேட்டஸ்.
Powered by Blogger.