குகைக்குள் சிக்கிய அனைவரும் மீட்பு!

தாய்லாந்து குகையில் மீதமிருந்த 4 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரை மீட்கும் பணிகள் இன்று (ஜூலை 10)
நிறைவடைந்தன. இந்த நடவடிக்கைக்கு, பல நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். குகையில் இருந்தவர்களுக்கு மீட்புப் பயிற்சி அளித்த 3 டைவிங் வீரர்கள் மற்றும் ஒரு மருத்துவரை வெளியே கொண்டுவரும் முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
கடந்த ஜூன் 23ஆம் தேதியன்று தாய்லாந்து நாட்டின் சியாங் ராய் மாகாணம் மா சே பகுதியிலுள்ள தாம் லுவாங் குகைக்குள் சென்றனர் மூ பா கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் எக்கபோல் சாண்டவாங். கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால், இவர்கள் அனைவரும் குகைக்குள் சிக்கிக்கொண்டனர். ஒரு வாரத்திற்கு முன்பாக, இவர்கள் குகைக்குள் மாட்டிக்கொண்டது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து மழை பெய்துவந்ததாலும், தாம் லுவாங் குகைக்குள் நீரோட்டம் அதிகமிருந்ததாலும், இவர்களை மீட்கும் பணிகள் தொடங்கத் தாமதமாகின.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூலை 8) முதலில் நான்கு சிறுவர்கள் மீட்கப்பட்டனர். நேற்று (ஜூலை 9) மாலை மேலும் நான்கு சிறுவர்கள் குகையிலிருந்து மீட்புப் படையினரால் அழைத்துவரப்பட்டனர். இவர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளது தாய்லாந்து அரசு. சியாங் ராய் மருத்துவமனையில் இந்தச் சிறுவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்களில் சிலருக்கு நிமோனியா காய்ச்சல் தாக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், வெளியாட்கள் யாரும் இவர்களைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. சிறுவர்களின் உறவினர்கள் கண்ணாடிக் கதவுகளுக்குப் பின்னால் இருந்து பார்க்க அனுமதி தரப்பட்டுள்ளது.
இவர்களது உடல்நிலையைக் கண்காணிக்க வேண்டியிருப்பதால், இன்னும் ஒரு வார காலம் இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் இருப்பார்கள் என்று கூறியுள்ளது தாய்லாந்து அரசு. அந்நாட்டின் பாரம்பரிய அரிசி உணவைச் சாப்பிட சிறுவர்கள் விருப்பம் தெரிவித்தாலும், அவர்களுக்கு ரொட்டி மற்றும் கஞ்சியே உணவாக வழங்கப்படுகிறது.
இன்று (ஜூலை 10) காலை தாம் லுவாங் குகையில் வெகுசீக்கிரமாக மீட்புப் பணிகள் தொடங்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்றிரவு அப்பகுதியில் மழை பொழிந்ததால், குகைக்குள் நீர்வரத்து அதிகமானது. ஆனாலும், தாய்லாந்து நேரப்படி காலை 10.08 மணிக்கு மீட்புப் பணிகள் தொடங்கின. சில மணிநேரங்களில் மீதமிருந்த 4 சிறுவர்களும், பயிற்சியாளர் எக்கபோல் சாண்டவாங்கும் மீட்கப்பட்டனர். 11ஆவது ஆளாக வெளியே அழைத்துவரப்பட்ட சிறுவனின் வயது 11 என்றும், இவர் நலமுடன் உள்ளார் என்றும் தாய்லாந்து தொலைக்காட்சிகளில் தகவல் வெளியாகியுள்ளது.
குகைக்குள் சிக்கிய 13 பேரும் வெளியே அழைத்து வரப்பட்ட தகவலை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு, தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளது தாய்லாந்து கடற்படை. ஆனாலும், தாய்லாந்து கடற்படையைச் சேர்ந்த 3 டைவிங் வீரர்களும் ஒரு மருத்துவரும் மீட்கப்படவில்லை. இவர்களது வழிகாட்டுதலால்தான், மீட்கப்பட்ட 13 பேரும் கடந்த சில நாட்களாக டைவிங் பயிற்சி பெற்றனர். இவர்களை வெளியே அழைத்துவருவதற்கான பணிகள் இப்போது நடந்துவருகின்றன.
தாய்லாந்தின் தாம் லுவாங் குகைக்குள் சிக்கிய 13 பேரும் மீட்கப்பட்டனர் என்ற தகவல் கேட்டு, பல நாடுகளிலிருந்தும் பாராட்டுகள் குவிகின்றன. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல், பிரிட்டன் பிரதமர் தெரசா மே, ஐஸ்லாந்து பிரதமர் கேத்ரீன் உட்பட பல நாடுகளின் தலைவர்கள் மீட்புக் குழுவினருக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, குகைக்குள் இருந்து வெளியே அழைத்துவரப்பட்ட சிறுவர்களுக்கு மயக்க மருந்துகள் அளித்ததாகச் சில ஊடகங்களில் தகவல்கள் வெளியானது. இதுபற்றிய கேள்விகளுக்குப் பதிலளித்த தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ சா, அதை எப்படிச் சிறுவர்களுக்குத் தர முடியும் என்று ஆவேசமடைந்தார். சிறுவர்களின் பதற்றத்தையும் பயத்தையும் கட்டுப்படுத்தும் மருந்துகளே அளிக்கப்பட்டதாகவும், அவை மயக்க மருந்துகள் அல்ல எனவும், அவர் பதிலளித்தார். துப்பாக்கிச் சுடும் பயிற்சி மேற்கொள்ளும்போது, தான் அத்தகைய மருந்துகளை எடுத்துக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
தொழில்நுட்பவியலாளர் மற்றும் பிரபல தொழிலதிபரான எலன் மஸ்க் என்பவர் தனது நிறுவனக் கண்டுபிடிப்பான சிறிய நீர்மூழ்கிக் கப்பலை இந்த மீட்புப் பணிக்காக அனுப்பிவைத்தார். ராக்கெட் தயாரிக்கப் பயன்படுத்தும் மூலப்பொருட்களைக் கொண்டு தயார் செய்யப்பட்ட அந்தக் கருவிக்கு, குகைக்குள் சிக்கிய சிறுவர்களின் கால்பந்து அணியைக் குறிப்பிடும் வகையில் ‘காட்டுப்பன்றி’ என்ற பெயரைச் சூட்டினார். அவரது உதவிக்கு நன்றி தெரிவித்தார் தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ சா. “அவரது தொழில்நுட்பமாகவும் நன்றாகவும், அதிநவீனமாகவும் உள்ளது. ஆனாலும், மீட்புப் பணி நடைமுறைகளுக்கு அது ஒத்துவரவில்லை” என்று குறிப்பிட்டார் சியாங் ராய் மாகாண ஆளுநரும் மீட்புப் பணிகளின் ஒருங்கிணைப்பாளருமான நாரோங்சக் ஒசதனகோன்.
இன்று காலையிலேயே, மீட்புப் பணிகள் முடிவடையும் என்ற நம்பிக்கையில் இருந்தனர் வீரர்களுக்கு உணவு சமைத்து தரும் பணியில் ஈடுபட்ட சமையல் நிபுணர்கள். தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில், இன்று அவர்கள் ‘க்ளுவா கிளிங்’ என்ற பெயருடைய பன்றி இறைச்சி உணவொன்றைச் சமைத்தனர். அவர்களது எண்ணப்படி, எந்த விதத் தடங்கலுமின்றி மீட்புப் பணிகள் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.