விக்னேஸ்வரனின் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்!

டெனிஸ்வரனை வடக்கு மாகாண அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த முறையீட்டு மனுவை விசாரிக்க நீதியரசர்கள் குழு
தீர்மானித்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 05ம் திகதி அந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று புவனேக அலுவிஹார, பிரியந்த ஜயவர்தன மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 05ம் திகதிக்கு விசாரணையை ஒத்திவைத்த நீதியரசர்கள். அன்றைய தினம் இது தொடர்பில் விளக்கமளிக்குமாறு மனுதாரர் சார்பான சட்டத்தரணிக்கு உத்தரவிட்டனர்.

வடக்கு மாகாண மீன் பிடித்துறை அமைச்சராக இருந்த பி.​டெனிஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவரை அந்த அமைச்சு பதவியில் இருந்து நீக்க கடந்த ஆண்டு முதலமைச்சர் விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்திருந்தார்.

இதனையடுத்து முதலமைச்சரின் தீர்மானத்தை ரத்துச் செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி பி.​ டெனிஸ்வரனை மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதன்படி பி.​டெனிஸ்வரனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்துக்கு தடை உத்தரவு பிறப்பித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கு எதிரான மனுவையே உச்சநீதிமன்றம் செப்ரெம்பர் மாதம் விசாரிக்கவுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.