கோபாலபுரத்தில் குவியும் தலைவர்கள்!

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் ஸ்டாலின் மற்றும்
கனிமொழியிடம் தொலைபேசியில் நலம் விசாரித்துள்ளார். மேலும் பல்வேறு தலைவர்களும் கோபாலபுரம் இல்லம் சென்று நலம் விசாரித்து வருகின்றனர்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து வீட்டிலிருந்தபடி ஓய்வெடுத்துவருகிறார். சில நாட்களாக அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்தது. கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை நேற்று வெளியிட்ட அறிக்கையில், “சிறுநீரகப் பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் (infection) காரணமாகக் காய்ச்சல் வந்துள்ளது. உடல்நிலையைக் கவனத்தில்கொண்டு, அவரை யாரும் நேரில் பார்க்க வர வேண்டாம் என்று மருத்துவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து நேற்றிரவு 10 மணியளவில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி மற்றும் கே. பாலகிருஷ்ணன், திருமாவளவன், கமல்ஹாசன், வாசன், சரத்குமார் உள்ளிட்ட தலைவர்கள் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் விசாரித்தனர்.
இந்த நிலையில் இன்று (ஜூலை 27) காலை முதலே திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், சிபிஎம் மூத்த தலைவர் தா.பாண்டியன், லதிமுக தலைவர் டி.ராஜேந்தர் உள்ளிட்ட தலைவர்களும், திமுக முக்கிய நிர்வாகிகளும் கோபாலபுரம் இல்லத்திற்கு செல்லத் தொடங்கினர். இல்லத்திற்கு எதிரேயுள்ள சாலையில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு, காவல் துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் நலம் விசாரித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய தலைவர்கள் கருணாநிதி நலமுடன் உள்ளார் என்று தெரிவித்துள்ளனர். 
வைகோ
ஆருயிர் அண்ணன் கலைஞர் அவர்கள் நலமுடன் இருக்கிறார். டிரக்யாஸ்டோமி செய்த பிறகு வழக்கமாக காய்ச்சல் வந்து நீங்கும். அதனை குணப்படுத்தும் விதத்தில் மருத்துவர்கள் தக்க சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர் நலமோடு இருப்பதாக ஸ்டாலின் கூறினார். முழுமையாக நலம் பெற்று மீண்டும் அதே காந்தக் குரலோடு வசீகரிக்கும் பார்வையோடு மக்களை சந்திக்கிற நிலையை இயற்கை அன்னை ஏற்படுத்தித் தருவாள் நம்பிக்கையோடு இருக்கிறேன்.
தமிழிசை
தமிழக மக்கள் விரும்புவதைப் போல கருணாநிதி மீண்டும் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று நான் இறைவனை வேண்டுகிறேன். அவருக்கு ஏற்பட்டிருக்கும் உடல் நலிவு இறைவனின் அருளால் மருந்துகளுக்கு ஆட்பட்டு அவர் பூரண குணமடைய வேண்டும். தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான அவர் நெடுநாள் வாழ வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
வேல்முருகன்
கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு ஓய்வில் இருக்கிறார். அவரது ஓய்வு தமிழ்ச் சமூகத்திற்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் விரைவில் நலம்பெற்று வர வேண்டும்.
மதுரையிலிருந்து காலை விமானம் மூலம் புறப்பட்டு மு.க.அழகிரி சரியாக 12 மணியளவில் தனது மகன் துரை தயாநிதியுடன் கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்றார்.
குடியரசுத் தலைவர், பிரதமர் நலம் விசாரிப்பு
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவரது குடும்ப நபர்களிடம் நலம் விசாரித்தேன். பொதுவாழ்வில் மூத்தவரான அவர், விரைவில் நலம் பெற வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடமும், கனிமொழியிடமும் தொலைபேசியில் கேட்டறிந்தேன். தேவையான எந்த உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறோம். கருணாநிதி விரைவில் குணமடைந்து நல்ல உடல்நலத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவரும் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், “கலைஞர் அவர்கள் விரைவில் உடல் நலம்பெற்று, மீண்டும் பழைய கம்பீர குரலோடு தமிழ் வசனங்கள் பேசி, தமிழகத்தில் மீண்டும் அரசியல் பணிகள் செய்ய, நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருக்க நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்” என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “வயது முதுமை காரணமாக உடல் நலிந்துள்ள எனது நண்பரும், திமுக தலைவருமான கலைஞர் உடல் நலம் பெற வேண்டும். மீண்டும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று விழைகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
கருணாநிதி விரைவில் நலம் பெற வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.