ஆளுநரிடம் மனு அளிக்கும் திமுக!

தமிழகத்தில் நடைபெற்ற வருமானவரித் துறை சோதனை தொடர்பாக ஆளுநரிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஜூலை 19) காலை செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய பல்வேறு திட்டங்களைப் பறிக்கும் வகையில் செயல்படும் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதை தார்மீக அடிப்படையில் திமுக ஆதரிக்கிறது.

தமிழகத்தில் நடைபெறும் பாலியல் பலாத்காரங்கள், கொலைகள் தொடர்பாக ஆதாரத்துடன் சட்டமன்றத்தில் திமுக கேள்வி எழுப்பியது. ஆனால் எதுவும் நடக்காதது போல் முதல்வர் கூறினார். தமிழக சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலையில் உள்ளது என்பதற்கு சிறுமி பாலியல் பலாத்கார சம்பவம் உதாரணமாக உள்ளது” என்று தெரிவித்தார்.

எட்டுவழிச் சாலை திட்டத்தை ரஜினி ஆதரிப்பதில் அதிர்ச்சி இல்லையென்றும் மத்திய அரசின் திட்டங்களை அவர் தொடர்ந்து வரவேற்று வருவதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

மேலும், “டெண்டர் ஊழல் குறித்து பேசும்போது தமிழகம் முழுவதும் உறவினர்கள் இருப்பதாக முதல்வர் கூறுகிறார். தமிழகம் முழுவதும் நடைபெறும் கொள்ளைகளுக்கு ஆள் இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்கிறார் முதல்வர். அரவக்குறிச்சி தேர்தல் சமயத்தில் அன்புநாதன் வீட்டில் வருமானவரிச் சோதனை நடைபெற்றது. அதேபோல், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், மேயராக இருந்த சைதை துரைசாமி இல்லங்களில் சோதனை நடைபெற்றது.

ஓ.பன்னீர்செல்வத்தின் நெருங்கிய நண்பர் சேகர் ரெட்டிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்தது. பின்னர், தலைமைச் செயலாளராக ராம்மோகன் இருந்தபோது தலைமைச் செயலகத்திலேயே சோதனை நடைபெற்றது. ஆர்.கே.நகர் தேர்தலின்போது அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது. 1800 அதிகாரிகள் இதில் ஈடுபட்டனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனைகள் தொடர்பாகக் குற்றப்பத்திரிகை கூட பதிவு செய்யப்படவில்லை. தற்போது எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தியோட பங்குதாரருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வரும் வருமானவரித் துறை சோதனை குறித்தும் முதல்வருக்கு இதில் உள்ள தொடர்பு குறித்தும் திங்கட்கிழமை ஆளுநரிடம் மனு அளிக்கவுள்ளோம். நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்வோம்” என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.