கேப்பாபுலவு காணிகளை இராணுவம் விடுவிக்காதாம்?

முல்லைத்தீவு – கேப்பாபுலவில், இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படும் சாத்தியமில்லை என்று, தகவல்கள் தெரிவிக்கின்றன.குறித்த காணிகளை, இராணுவத்துக்கென்றே சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், பொதுமக்களது காணிகளை விடுவிக்கும் சாத்தியமில்லையென, இராணுவத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த முகாம் அமைந்துள்ள காணியில் குறிப்பிடத்தக்களவு நிலப்பரப்பு, பொதுமக்களுக்குச் சொந்தமாகக் காணப்படுகின்ற போதிலும், அக்காணி உரிமையாளர்களுக்காக, மாதிரிக் கிராமத்தில் காணியுடன் வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், ​முகாம் அமைந்துள்ள காணியை விடுவிப்பதற்கான சாத்தியமில்லையெனத் தெரிவிக்கும் இராணுவம், குறித்த காணிகளின் உரிமையாளர்களில் சிலர், அவற்றை இராணுவத்துக்கு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் கூறியது.

இதேவேளை, பல கோடி ரூபாய் செலவில், இராணுவ முகாம் கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை உடைத்துத் தள்ளிவிட்டு, வேறு இடங்களுக்கு இடம்பெயரும் போது, மேலும் பலகோடி ரூபாய்களைச் செலவிட நேர்வதால், இராணுவத்துக்குப் பாரிய நட்டம் ஏற்படுவதாக, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி, இராணுவ முகாமுக்கு முன்னால் கேப்பாபுலவு மக்களால் முன்னெடுத்து வரும் கவனயீர்ப்புப் போராட்டம், 502ஆவது நாளைக் கடந்த நிலையில், அத்துமீறித் தமது காணிகளுக்குள் நுழைய வேண்டிய நிலைமை ஏற்படுமென, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் எச்சரித்துள்ளனர்.

தமது பூர்விகக் காணிகளை முழுமையாக விடுவிக்கும் வரை, தமது போராட்டம் தொடருமென்றும் தமது காணிகளுக்குள் நுழைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் ஏற்படும் விபரீதங்களுக்கு, அரசாங்கமும் அரசியல் தலைமைகளும், சர்வதேசமுமே பொறுப்புக்கூற வேண்டுமென்றும் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.