முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை பசுமை வழிச் சாலையிலுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீடு சென்னை பசுமை வழிச் சாலையில் அமைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்ற நாள் முதல், தினமும் அவரைச் சந்தித்து மனு அளிக்க ஏராளமானோர் அவரது இல்லத்துக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இதனால் இப்பகுதி எப்போதும் பரபரப்புடனே காணப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை (ஜூலை 2) தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. எதிர்முனையில் பேசிய சிறுவன், முதல்வர் இல்லத்தில் வெடிகுண்டு உள்ளது என்று மிரட்டல் விடுத்துவிட்டுத் துண்டித்துவிட்டார். இதுகுறித்து முதல்வர் பாதுகாப்புப் படைக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. முதல்வர் வீட்டுக்கு விரைந்த காவல் துறையினர், மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்துள்ளது.

காவல் துறையினர் நடத்திய விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது ஈரோடு மாவட்டம் காசிப்பாளையத்தைச் சேர்ந்த சிறுவன் அஷ்வின் என்பது தெரியவந்துள்ளது. சிறுவனின் தாயார் தனது மகன் தவறுதலாக போன் செய்துவிட்டான் என்று கூறியதாகவும் காவல் துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.