நேபாளத்தில் 1,300 பேர் சிக்கித் தவிப்பு!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்குச் சென்ற இந்திய பக்தர்கள் 1,300 பேர் கனமழையால் ஹில்சா நகரில் சிக்கித் தவிப்பதாக, அவர்களது உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.


சீனாவின் திபெத்தில் உள்ள கைலாஷ் மானசரோவருக்கு ஏராளமான இந்தியர்கள் ஆண்டுதோறும் புனித யாத்திரை மேற்கொண்டுவருகிறார்கள். கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு நேபாளத் தலைநகர் காட்மாண்டு வரை விமானத்தில் சென்றுவிட்டு, அங்கிருந்து தரை மார்க்கமாக சீன எல்லையைக் கடந்து கைலாய மலையைப் பக்தர்கள் அடைவது வழக்கம்.

இந்த நிலையில் ஹில்சா நகரில் கனமழை பெய்வதால், இந்திய பக்தர்கள் 1,300 பேர் அங்கு சிக்கித் தவிப்பதாக, அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கேரளம், கர்நாடகத்தைச் சேர்ந்த நான்கு பக்தர்கள் கடும் குளிரைத் தாங்க முடியாமல் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாத்திரைக்குச் சென்றவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 500 பக்தர்கள் சிக்கித் தவிப்பதாகவும், உதவிக்காகக் காத்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்குச் சென்ற பக்தர்கள் குழுவில் சென்னையைச் சேர்ந்த 19 பேரும், தமிழக முன்னாள் எம்.எல்.ஏ. காயத்ரி தேவியும் உள்ளனர். தங்களை மீட்கும்படி இந்திய அரசுக்குப் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடும் பனிப்பொழிவும் நிலவுவதால் கைலாஷ் யாத்ரீகர்கள் கடும் குளிரில் வாடுகின்றனர். சீனா - நேபாளம் எல்லை ஹில்சாவில் சிக்கிய தங்களை மீட்குமாறு பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.