கதைத் திருட்டு: ஷங்கர் ஆஜராக உத்தரவு!

எந்திரன் திரைப்படக் கதை தன்னுடையது என்றும் அதை அனுமதி பெறாமல் இயக்குநர் ஷங்கர் பயன்படுத்தியுள்ளதாகவும் எழுத்தாளர் ஆரூர் தமிழ் நாடன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று(ஜூலை 26) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, ஷங்கர் ஆகஸ்ட் 1ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஐஸ்வர்யா ராய் நடித்த படம் எந்திரன். 2010ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘2.ஓ’ என்ற பெயரில் தற்போது தயாராகி வருகிறது.

எந்திரன் படத்தின் கதை என்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், “1996ஆம் ஆண்டு உதயம் என்ற பத்திரிக்கையில் ஜூகிபா என்ற பெயரில் தொடர்கதை எழுதினேன். அந்தக் கதையை என்னிடம் எந்த அனுமதியும் பெறாமல் ஷங்கர் படமாக எடுத்துள்ளார்” என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் காப்புரிமை சட்டப்படி 1 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு இயக்குநர் ஷங்கர், கலாநிதி மாறன் மற்றும் சன் பிக்சர்ஸ் மீது வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம், சென்னை உயர்நீதிமன்றம் 27.04.2018க்குள் சாட்சியங்கள், விசாரணை மற்றும் குறுக்கு விசாரணையை முடிக்கவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு கடந்த 8ஆண்டுகளாக நடந்து வருகிறது. படத்தின் இயக்குநர் ஷங்கர் தனது தரப்புக்கான ஆதாரங்களை தாக்கல் செய்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆவணங்களை தாக்கல் செய்த ஷங்கர் ஆஜராகாமல் அவரது உதவியாளர் யோகேஷ் சாட்சியளிக்க நீதிமன்றத்தில் முன்வந்தபோது ஆரூர் தமிழ்நாடன் சார்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கதைத் திருட்டு என்ற புகாருக்கு இயக்குநர் என்ற முறையில் ஷங்கர் மட்டுமே பதிலளிக்க முடியும். அவர் கதையைத் திருடவில்லை என்று மூன்றாம் நபர் சாட்சியளிக்க சட்டத்தில் இடமில்லை என்று வாதிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று (ஜூலை 26) மீண்டும் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஷங்கர் தொடர்ந்து பட வேலைகளில் இருப்பதால் அவரால் ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் வாதிட்டார். “ஷங்கருக்காக நீதிமன்றத்தை படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு மாற்ற முடியாது. ஷங்கர் வருகிற ஆகஸ்ட் 1ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். அவரிடம் எதிர்தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்வார். இவை அனைத்தும் ஆகஸ்ட் 8ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.