ஸ்டெர்லைட் : ஆகஸ்ட் 17இல் விசாரணை!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீடு மனுவை ஆகஸ்ட் 17ஆம் தேதி விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் 100 ஆவது நாளில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். இதையடுத்து, மே 28ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆலையை மூடி சீல் வைத்தார்.

இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்திலும், தேசிய பசுமை தீர்ப்பாயத்திலும் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்தது. இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரியும், தமிழக அரசின் தடையை ரத்து செய்யக் கோரியும் வேதாந்தா நிறுவனம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஏ.கே. கோயல் தலைமையிலான அமர்வு, ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள மட்டும் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கு மீதான விசாரணையை வரும் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணியை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய அனுமதியை எதிர்த்தும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் தமிழக அரசு நேற்று(ஆகஸ்ட் 13) உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தமிழக அரசின் சார்பில் அரசு வழக்கறிஞர் யோகேஷ் கன்னா மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பு கோரிக்கை விடுத்தது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம், மேல்முறையீட்டு மனுவை ஆகஸ்ட் 17ஆம் தேதி விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.