செல்வச் செழிப்புமிக்க இந்தியப் பெண்கள்!

இந்தியாவின் அதிக சொத்து மதிப்பு மிக்க பெண்களுக்கான பட்டியலில் கோத்ரெஜ் நிறுவனத்தின் ஸ்மிதா கிருஷ்ணா முதலிடம் பிடித்துள்ளார்.

கோடாக் மகிந்திரா வங்கியின் ஒரு அங்கமான கோடாக் வெல்த் மேனேஜ்மெண்ட் மற்றும் ஹூரன் இந்தியா ரிப்போர்ட் இணைந்து கோடாக் வெல்த் ஹூரன் என்ற இந்தியாவின் அதிக சொத்து மதிப்பு மிக்க பெண்களுக்கான பட்டியலை இந்த ஆண்டிலிருந்து வெளியிடத் தொடங்கியுள்ளன. 2018ஆம் ஆண்டுக்கான இந்தப் பட்டியலில் கோத்ரெஜ் நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்மிதா முதலிடம் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு தற்போது ரூ.37,570 கோடியாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தனது சகோதரர்களுடன் இணைந்து கோத்ரெஜ் நிறுவனத்தை நடத்தி வரும் இவர் அந்நிறுவனத்தின் ஐந்தில் ஒரு பகுதிப் பங்குகளைத் தன்வசம் வைத்துள்ளார்.

ஸ்மிதா கிருஷ்ணாவைத் தொடர்ந்து ஹெச்.சி.எல். நிறுவனத்தைச் சேர்ந்த ரோஷினி நாடார், ரூ.30,200 கோடி சொத்து மதிப்புடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். டைம்ஸ் குரூப்ஸ் நிறுவனத்தின் தலைவரான இந்து ஜெயின் ரூ.26,240 கோடி சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். ரூ.24,790 கோடி சொத்து மதிப்புடன் நான்காவது இடத்தில் உள்ள கிரண் மசூம்தார், சுயமாகத் தொழில் தொடங்கி, அதிக சொத்து சேர்த்த பெண்களுக்கான பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இவர் தனது பயோகான் நிறுவனத்தை 1978ஆம் ஆண்டிலேயே தொடங்கி மருந்துத் துறையில் சிறப்பான வளர்ச்சியைக் கண்டுவருகிறார்.

அதிக சொத்து மிக்க பெண்களுக்கான பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ள ஷாரதா அகர்வால், சுயமாகத் தொழில் தொடங்கி அதிக சொத்துசேர்த்த இளம் வயதுப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 2006ஆம் ஆண்டில் அவுட்கம் ஹெல்த் நிறுவனத்தைத் தொடங்கிய இவரது சொத்து மதிப்பு தற்போது ரூ.8,200 கோடியாக உள்ளது. இப்பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள், கிரண் நாடார் (ஹெச்.சி.எல்), லீனா காந்தி தேவாரி (யு.எஸ்.வி), சங்கீதா ஜிண்டால் (ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல்), ஜெயஸ்ரீ உல்லால் (அரிஸ்டா நெட்வொர்க்ஸ்) மற்றும் அனு அகா (தெர்மாக்ஸ்) ஆகிய பெண்களும் இடம்பெற்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.