2022க்குள் விண்ணில் இந்தியர்கள்!

ககன்யான் திட்டம் மூலம் செயற்கைக்கோளில் இந்தியர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் 2022க்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்த பிரதமர் மோடி, “உலகின் மிகப்பெரிய அரசு மருத்துவ காப்பீடு திட்டமான ஆயுஷ்மான் பாரத் செப்டம்பர் 25ஆம் தேதி தொடங்கப்படும்” எனவும் அறிவித்துள்ளார்.

இந்தியாவின் 72ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் 15) கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். பின்னர் டெல்லி செங்கோட்டைக்கு வந்த அவர் முப்படை வீரர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். 21 குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்க, நாட்டின் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் உரையாற்றிய அவர் “நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள், இந்தியா புதிய உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்திய பெண்களை நான் வணங்குகிறேன். நமது மகள்கள் ஏழு கடல்களை தாண்டிச் சென்று மூவர்ணக் கொடியினால் உலகையே வண்ணமயமாக்கியுள்ளனர்.

எவரெஸ்ட் சிகரத்தில் தேசியக் கொடியை ஏற்றிய பழங்குடியின குழந்தைகளை வணங்குகிறேன். இவர்கள் இந்தியாவை பெருமையடைய செய்துள்ளனர்.

சமீபத்தில் முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர் சமூகநீதிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பிற பிற்படுத்தப்பட்டோருக்கான ஒபிசி ஆணையத்துக்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டதை இந்த கூட்டத்தொடர் கண்டது.நாட்டின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. அதேவேளையில் சில பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் தமது உறவினர்களை இழந்தவர்களுடன் என் நினைவுகள் இருக்கும்” என்று தெரிவித்தார்.

மகாகவி பாரதியார் குறித்து தமிழில் பேசிய பிரதமர், “எல்லோரும் நல்முறை எய்தும் நிலையை இந்தியா உலகிற்கு அளிக்கும் என்றார் பாரதி. இந்தியா மகா தேசமாக உருவெடுப்பது மட்டுமல்லாது மற்றவர்களுக்கும் அகத்தூண்டுதலாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அனைத்துத் தடைகளையும் களைவது எப்படி என்பதை உலகிற்கு இந்தியா காட்டும் என்றவர் பாரதி’ எனக் குறிப்பிட்டார்.

அம்பேத்கர் வழங்கிய அரசியல் சாசனத்தின் படி அனைவருக்கும் சமூக நீதி உள்ளதாக தெரிவித்த அவர், “ இதனை உறுதி செய்து இந்தியா அதிவேகமாக வளர்ச்சி பெறுவதை உறுதி செய்வோம். ஏழைகளுக்கு நீதி கிடைக்கும். ஒவ்வொருவரும் அவரவர் விருப்பங்களுக்கும் ஆசைகளுக்கும் ஏற்ப முன்னேற வாய்ப்பு கிடைத்துள்ளது.

புதிய தொழில்நுட்பத்துடன் விவசாயிகள் பணியாற்றி வருகின்றனர்.சுய வேலைவாய்ப்பை உறுதி செய்யும் முத்ரா திட்டத்தில் 13 கோடி பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதனால் தொழிலதிபர்கள் லாபம் ஈட்டி வருகின்றனர். ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால் பொருளாதார ஆபத்தில் இருந்து நாடு மீண்டுள்ளது

முத்தலாக் சட்டத்தை அமல்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. பெண்கள் நாட்டைப் பெருமை அடையச் செய்துள்ளனர். பெண்களின் உரிமையைக் காப்பதில் இந்த அரசு உறுதி பூண்டுள்ளது.முத்தலாக் முறை முஸ்லிம் பெண்களுக்கு பெரிய அநீதி இழைத்து வருகிறது, நாங்கள் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்கிறோம். ஆனால் சிலர் அது முடியக் கூடாது என்று விரும்புகின்றனர். முஸ்லிம் பெண்களுக்கு உறுதி அளிக்கிறேன், உங்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்பாடுபடுவேன் ” என்றும் தெரிவித்தார்.

தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டம் பாரதிய ஜன சங்க் கட்சியின் துணை நிறுவனரான தீன் தயாள் உபாத்யாயா பிறந்த நாளான செப்டம்பர் 25ஆம் தேதி தொடங்கப்படும் என்று மோடி அறிவித்தார். இந்தத் திட்டம் 50 கோடி இந்தியர்களுக்கு உதவியாக இருக்கும்.

இதேபோல், “2022ஆம் ஆண்டில் இந்தியா தனது 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போதோ அதற்கு முன்னதாகவோ, ககன்யான் திட்டம் மூலம் செயற்கைக்கோளில் இந்திய மகன் அல்லது மகள் தனது கையில் மூவர்ண கொடியை ஏந்தி விண்ணுக்கு செல்வார்” என்றும் மோடி தெரிவித்தார்.

தனது சுதந்திர தின உரையில் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியையும் மோடி விமர்சித்தார்.

“2013 ஆண்டு பின்னோக்கி இருந்த நமது நாட்டின் வளர்ச்சி இன்று முன்னேற்றம் அடைந்துள்ளது. 2013 போல் கழிவறைக் கட்டுவதோ, நாடு முழுதும் மின்சாரம் அளிக்கும் திட்டமோ நடந்திருந்தால் இன்னும் பத்தாண்டுகள் ஆகியிருக்கும் அவற்றை முடிக்க, ஆனால் அதனை இப்போது சாதித்திருக்கிறோம் என்பதில் பெருமை அடைகிறோம்” என மறைமுகமாக காங்கிரஸை விமர்சித்தார்.

கொடியேற்றும் நிகழ்ச்சியில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்களும் வெளிநாட்டுத் தூதர்களும் கலந்துகொண்டனர்.

#india  #tamilarul  #tamilnews   

No comments

Powered by Blogger.