செய்தி தொடர்பாளர்கள் நியமிக்கப்படவில்லை!

‘செய்தி தொடர்பாளர்களாக நாங்கள் யாரையும் இதுவரை நியமிக்கவில்லை’ என ரஜினி மக்கள் மன்றம் விளக்கம் அளித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக கூறினார். ரசிகர் மன்றம், ரஜினி மக்கள் மன்றம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மன்றத்தின் மாநில செயலாளராக ராஜூ மகாலிங்கம் நியமிக்கப்பட்ட நிலையில், அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றுவருகிறது.

ரஜினி மக்கள் மன்றம் சார்பாக தொலைகாட்சி விவாதங்களில் கலந்து கொள்ள செய்தி தொடர்பாளர்கள் இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை. ஆனால் விவாதங்களில் ரஜினி ஆதரவாளர் என்று பலர் பங்கேற்று வந்தனர்.

இந்நிலையில், பத்திரிகையாளர் கோசல்ராம் ரஜினி மக்கள் மன்றத்தின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளராக நியமிக்கப்படவுள்ளார் என்று செய்திகள் வெளியாகின.

இதனை மறுத்து ரஜினி மக்கள் மன்றம் இன்று (ஆகஸ்ட் 14) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பத்திரிகையாளர் கோசல்ராம் ரஜினி மக்கள் மன்றத்தின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் என்று சிலர் வதந்தியை பரப்பி வருவதாக மன்றத்திற்கு தகவல் வந்துள்ளது. ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பாக அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர்கள் என்றோ, தொலைக் காட்சி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் என்றோ இதுநாள் வரை யாரும் நியமிக்கப்படவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பைப் பகிர்ந்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பத்திரிகையாளர் கோசல்ராம், “இதை நான் சொன்ன போது பலரும் நம்ப மறுத்தார்கள். இப்போதாவது நம்புங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.