2ஆவது முறையாக கொடியேற்றியதில் பெருமை முதல்வர்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியேற்றி வைத்து உரையாற்றினார்.

நாட்டின் 72ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், முப்படை வீரர்கள் , போலீசாரின் அணிவகுப்பு மரியாதையுடன் சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடி ஏற்றி வைத்து வீர வணக்கம் செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் , தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கொடி ஏற்றத்தைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்குச் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது உரையைத் தொடங்கினார்,

“2ஆவது முறையாகச் சுதந்திர தின கொடியேற்றியதில் பெருமை அடைகிறேன். பல்வேறு சுதந்திர போராட்ட வீரர்கள் வாழ்ந்த தியாக பூமி தமிழகம் தான். வரலாற்று நாயகர்களை என்றும் போற்றி வணங்க வேண்டும். இந்திய சுதந்திர போராட்டத்திற்கான வேள்வி தமிழகத்தில் தான் தொடங்கியது என்பதில் பெருமை கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

சுதந்திரத்திற்காக இன்னுயிர் நீத்த வீரத் தியாகிகளின் தியாகத்தினை, அனைவரும் நினைத்துப் போற்றிட வேண்டும். அவர்கள் செய்த தியாகத்தினையும், அவர்களின் பெருமையையும், அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்றார்.

“இந்த அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து இன்று வரை, தமிழகம் முழுவதும் 22 ஆயிரத்து 439 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பிலான 41,031 திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தும், 16 ஆயிரத்து 681 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 7 ஆயிரத்து 596 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்லும் நாட்டப்பட்டுள்ளது.

நாட்டின் விடுதலைக்காக வாழ்நாளை அர்ப்பணித்த தியாகச் செம்மல்களை சிறப்பிக்கும் வகையில் தற்போது அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் 13,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாக உயர்த்தப்படும்.

சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடும்ப ஓய்வூதியம் 6,500 ரூபாயிலிருந்து 7,500 ரூபாயாக உயர்த்தப்படும்.

பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டத்தின் கீழ், 2,276 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1 லட்சத்து 30 ஆயிரம் வீடுகளும், முதலமைச்சரின் சூரிய ஒளி மின்வசதி கொண்ட பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் 420 கோடி ரூபாய் செலவில் 20,000 வீடுகளும் கட்டப்படும்.

ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு, இந்த ஆண்டு முதல் ஊரக உள்ளாட்சிகளுக்கு வழங்கும் பகிர்வு நிதியில் ஆண்டுதோறும் 100 கோடி ரூபாய் தனியாக ஒதுக்கி பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

ஜெயலலிதா வழியில், தமிழக அரசு ஏழைகளுக்குப் பாடுபட்டு வருகிறது. தமிழக அரசு பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகிறது. குறிப்பாக உணவு தானிய உற்பத்தியில் தமிழகம் சாதனைப் படைத்து வருகிறது. நீர்வள ஆதாரங்களைப் பாதுகாக்க குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 88 ஆண்டுகளுக்குப் பின் மேட்டூர் அணை தூர்வாரப்பட்டுள்ளது. ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

#inda   #tamilnews   #eddapaddi 

No comments

Powered by Blogger.