தேசியக் கொடி ஏற்றிய ஆளுநர்!

தமிழகத்தில் முதன் முறையாக சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடியேற்றினார். அவரோடு ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜகோபால் ஐ.ஏ.எஸ். இருந்தார்.

ஆகஸ்டு 13 ஆம் தேதி மின்னம்பலத்தில், ஆகஸ்டு 15: கொடியேற்றத் தயாராகும் ஆளுநர் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அச்செய்தியில், “நாட்டின் சுதந்திர தினமான ஆகஸ்டு 15 ஆம் தேதி, மாநில முதல்வர்கள் கொடியேற்றும் உரிமையை வாங்கித் தந்த பெருமை மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரையே சேரும். 1974 ஆகஸ்டு 15ஆம் தேதியன்று புனித ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றிய கலைஞர்தான் , சுதந்திர தினத்தன்று கொடியேற்றிய முதல் முதலமைச்சர். தமிழகத்தில் தேசியக் கொடியை சுதந்திர தினத்தன்று ஏற்றும் உரிமை திமுக ஆட்சிக் காலத்தில்தான் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினர்.

ஆனால் கலைஞர் மறைந்த சில தினங்களில் வர இருக்கும் இந்த வருட சுதந்திரத் திருநாளான ஆகஸ்டு 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று தமிழகத்தில் ஆளுநரும் மூவண்ணக் கொடியேற்ற இருக்கிறார் என்ற அதிர்ச்சித் தகவல் தமிழக உயர் அதிகாரிகளிடம் இருந்து கசிந்து வருகிறது” என்று குறிப்பிட்டிருந்தோம். அதை இன்று உண்மையாக்கியிருக்கிறார் ஆளுநர்.

ஆளுநர் மாளிகையில் தேசியக் கொடியை இன்று ஏற்றி வைத்து பேசிய பன்வாரிலால் புரோகித்,

“முதன் முறையாக ஆளுநர் மாளிகையில் தேசியக் கொடியை ஏற்றி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சுதந்திரப் போராட்ட வீரர்களும் தியாக சீலர்களும் தங்கள் இன்னுயிரை ஈந்து சுதந்திரத்தை நமக்கு பெற்றுக் கொடுத்துள்ளனர்” என்று குறிப்பிட்டார். ஆளுநர் மாளிகை ஊழியர்களுக்கும் பணியாளர்களுக்கும் இனிப்புகளை வழங்கினார்.

பின்னர், சுபாஷ் சந்திர போஸ், அண்ணா ஆகியோரின் சுதந்திர தின உரை ஆவணப் படத்தை பார்வையிட்டார்.

சுதந்திர தினத்தன்று வழக்கத்துக்கு மாறாக, ஆளுநர் தேசியக் கொடி ஏற்றியது அரசியல் வட்டாரங்களிலும், அதிகார வட்டாரங்களிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.