முற்கம்பி தந்தவலியைவிட உங்கள் வார்த்தைகள் வலிக்கிறது!

தூக்கமின்றியே புலர்ந்ததுபொழுது, பாயைவிட்டு எழும்பவே விருப்பமின்றி இருந்தேன்,வழமைபோன்று அம்மாவின் ஆராதனை தொடங்கியது,பிள்ளை நேரத்தோட எழும்பன் இன்றைக்கு சந்திதி கோயிலுக்கு
போகோனும்.பொம்பிளையை பார்க்கோணுமாம் சாதகமும் நல்ல பொருத்தமாம் என்று புரோக்கர் சொன்னது நினைவில்லையே உனக்கு என்று தொடங்கினால்,

இன்றைக்கு மட்டுமா போறன் இப்படி ஏழு வருசமா என்ர அம்மாவோட நான்படுறபாடு அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும்,

பெற்றவளின் ஆதங்கம் எனக்கு புரியாமல் இல்லை
புணர்வாழ்விற்குச் சென்றுவந்த ஓர்முன்னால் பெண்போராளியே நான்.இறுதி யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்து வவனியா பூந்தோட்டம்.பம்பைமடு,செட்டிக்குளம் கொழும்பு என்று  புணர்வாழ்விற்காக பலஇடங்கள் அனுப்பப்பட்டு இரண்டு வருடம் புணர்வாழ்வு முடித்து வீட்டிற்கு வந்தேன்.

எனக்கு 39 வயதாகிவிட்டது.வீட்டில் நான்தான் மூன்றாவது.இரண்டு அக்கா ஒரு தம்பி.எல்லோரும் திருமணம்செய்து வேறாகப்போய்விட்டார்கள்,அப்பாவும் நோயில் இறந்துவிட்டார்,அம்மாவும் நானும்தான் இப்போது குடும்பத்தில்

என்னை எப்படியாவது ஒருவனின் கையில் பிடிச்சுகொடுத்திடனும் என்பதுதான் என் அம்மாவின் ஆசை,விடிஞ்சா பொழுதுபட்டா அம்மா சொல்றஒரே ஒரு வசனம்,நான் கண்ணமூட முதல் பிள்ளை உன்னை ஒருதன்ர கையில பிடிச்சுகொடுத்திடோனும் அப்பதான் என்ர சீவன்போகும் என்று.இந்த வார்த்தைகளை கேட்க என்மனம் வலிக்கும்.இந்த வார்த்தைகளிற்காகவே போவேன்,என்ர அம்மா பாவம் என்னால கவலைப்படக்கூடாதுஎன்பதற்காக போகிறேன்.

என்ன செய்வது எங்களிடம் பணம் இல்லை நாங்கள் ஏழைகள் பணமிருந்தால்தான்  திருமணம் நடக்கும் என்ற நிலை.பல திருமணங்கள் சீதனபிரச்சனையில குழம்பிப்போச்சுது.என் சகோதரர்களிடமும் பணம் இருந்தால்தானே அவர்களிடம் வாங்குவதற்கு,அவர்கள் அன்றாடம் உழைத்து வயிற்றை கழுவுபவர்கள்

என்ன செய்வது எல்லாம் நம் தலையெழுத்து என்றுஎழுந்து சென்று வீட்டு வேலைகளை முடிச்சுக்கொண்டு குளித்துவிட்டு உடைமாற்றிக்கொண்டேன்,பிள்ளை கெதியா வெளிக்கிடு 9-00மணிக்கு அங்க நிற்கோனும் வேளைக்கு போவம் மாப்பிளைவீட்டுக்காறர்வரமுதல் போய் கோயிலை சுத்தி கும்பிடோனும்,முருகா என்ர பிள்ளைக்கு இந்த கலியாணமாவது பொருந்திடனும் என்று தொடங்கினா.

எனக்கு கோபம்தான் வந்தது,அம்மாவை பேசிவிட்டேன்.ஏனம்மா இப்பிடி போய்வாறது புதுசா எங்களுக்கு,கொஞ்சம் பேசாம இருங்கம்மா பார்ப்பம் என்றேன்.இன்றைக்குதான் கடைசியா வருவன்,இந்த கலியாணமும் சரிவராட்டி இனி வாழ்க்கையில வரமாட்டன்,ஓட்டோகாறனுக்கும் சாதகம்பார்கிற ஜயருக்கும் ஸ்ரூடியோ காறனுக்கும் குடுத்தகாசே காணும் ஒரு அரைபவுண் சங்கிலிவாங்க என்று மளமளவென்று பேசிமுடித்தேன்,

அம்மாவுக்குத்தெரியும் கோபம் வந்தால் நான் இப்படி நடந்துகொள்ளுறனான் என்று,அதால பேசாம வெளிக்கிட்டு ஓட்டோகாறபோய் கூட்டிவந்து கூப்பிட்டா ஏறிக்கொண்டேன்,

எல்லா பெண்களுக்கும் சாதாரணமாக இருக்கும் ஒருஆசைதான் திருமண ஆசை,ஆனால் பல பெண்களிற்கு அதுகானல்நீராகவே அமைந்துவிடுகிறது,

"ஊமைகண்ட கனவும் ஓர் ஏழைப்பெண்ணின் ஆசைகளும் எப்போதும் ஒன்றே"

வெளியில் கூறமுடியாது தமக்குள் அடக்கிவச்சிருப்பார்கள்,நான் மட்டும் என்ன இதற்கு விதிவிலக்கானவளா....?எமக்குதான் இந்த நிலை எவளவு கஸ்ரப்படுறம்....

வேகமாகச் சென்ற ஓட்டோ கோயிலடியில் நின்றபோதே சுயநினைவிற்கு வந்தேன்,மணமகன் வீட்டார் இன்னும் வரவில்லை என்பது தெரிந்தது.ஏதோ சும்மா கடமைக்கு சாமியைகும்பிட்டன்,

என்ர அம்மா பாவம் என்ர ஆசைகளிற்காக இல்லாவிட்டாலும் அம்மாவின் ஆசைகளிற்காக இந்த கலியாணம் சரிவந்திடனும் என்று நினைத்துக்கொண்டேன்

மாப்பிளை வீட்டுக்காறர் வருவது தெரிந்தது,புரோக்கர் எம்மை அவர்கள் நிற்கும் இடத்திற்கு வரும்படி கூப்பிட்டார்,

எனக்கு மனசுக்கு ஒருமாதிரி இருந்தது அவயளுக்கு முன்னுக்கு எப்பிடி போறது.அம்மாக்கு பின்னால போவம்என்று போனன்,என் அம்மாவிற்கு என் நிலை புரியாமல் வேகமா போட்டா ஆர்வதில,

சரி என்றுதனியே நடந்துபோனேன்.யாரையும் நிமிர்ந்து பார்க்கவும் முடியாம இருந்திச்சு,ஒரு தடவை மாப்பிளை பெடியன பார்க்கணும் என்று என்மனம் விரும்பியது.நான் தலையை நிமிர்த்தினேன் மெதுவாக.

மாப்பிழையின்தாய் கோபமாக நிற்பது புரிச்சுது,ஏன் இவா இப்படி நிற்கிறா...?என்று எண்ணிமுடிப்பதற்குள் தொடங்கியது 4ஆம்கட்ட உலகப்போர்.

ஏன் என்ர பிள்ளைக்கு என்ன குறை இப்பிடி ஆமிக்காறனோட தடுப்பில இருந்து வந்தவளுக்கு என்ரபிள்ளையோ தேவைப்படுது...?இப்பிடி ஒரு பொம்பிளைய எடுத்துபோட்டு நாங்கள் சமுதாயத்தில தலைநிமிர்ந்து வாழுறேலயே...?எங்கட சொந்தபந்தங்கள் கேட்டா நாங்கள் என்னபதில் சொல்றது,இவளவு காலமும் எங்கள வச்சு உழைச்சுபார்த்தபிள்ளைக்கு இவளே பொம்பிளை என்று மெய்மறந்து கத்தினா

இவற்றைக்கேட்ட நொடியே என் உடலில் ஆயிரம் தோட்டாக்கள் பாய்ந்ததுபோல இருந்தது.என் கண்களில் இருந்து கண்ணீர் தாரைதாரையாக ஓடியது. உலகமே இருண்டுபோனது,யுத்தத்தில் இறந்தபோயிருக்கலாம் போல் இருந்திச்சு,

என்ர கடவுளே ஆமியோட படுக்கையை பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு நான் கேவலம் கெட்டவளா..?தலைவர் எங்களை அப்படியா வளர்த்தவர்,புணர்வாழ்வில இருந்தவர்கள் எல்லாம்ஆமியோட படுக்கையை பகிர்ந்துகொண்டா வந்துநிற்கிறார்கள்,தடுப்பில் கம்பி வேலிக்கு வெளியில்தான்ஆண் இராணுவத்தினர் உள் பகுதியில் பெண் இராணவத்தினரே நின்றார்கள்.என்று இவர்களிற்கு எப்படி பரியவைய்ப்பன்

எனது காலில் ஏற்பட்டிருந்த பெரிய காயத்தினால் தொடர்ச்சியாக சத்திரசிகிச்சை செய்தபடியால் காயக்காலிற்கு என் இடுப்புப்பகுதி இறக்காமல் இருப்பதற்காக இரண்டு பாட்டா சேர்ந்த ஒட்டுபாட்டா ஒன்றன்மேல் ஒன்று ஒட்டி போட்டு கொஞ்சம் நொண்டிக்கொண்டு போனதைதான் அந்தத்தாய் இனங்கண்டு கொண்டார்,நான் போராளி என்று.

நாங்கள் புரோக்கரிற்கு எதுவும் மறைக்கேல இயக்கத்தில இருந்ததோட காயப்பட்டது தடுப்பில இருந்தது, பெரிசா சீதனம் தரமாட்டம் என்றெல்லாம் ஏற்கனவே சொல்லித்தான் இருந்தனாங்கள்.புரோக்கர் பொய்சொன்னதற்கு நாங்கள் என்னசெய்ய முடியும்."முடவன் கொப்புத்தேனுக்கு ஆசைப்படக்கூடாது" என்று சொல்லவாங்க

 நான்கூட திருமணக்கனவு கண்டது தப்புத்தான் எல்லாபெண்களைப்போலவும் எங்களுக்கம் ஆசைகளும் கனவுகளும் இருக்கத்தானே செய்யும்.ஏன் போராளியாக இருந்தவர்களிற்கு ஆசைகள் கனவுகள் உணர்வுகள் என்பது இல்லையா..?அந்ததாயின் வார்த்தை எல்லாம் அம்பாய்என்நெஞ்சை துளைத்தபடி இருந்தது,இப்படி நாக்குகூசாமல் எத்தனை வார்த்தைகள் எல்லாவற்றையும் மணமகனின் தாய் இலவசமாக அள்ளி எறிந்தபடி இருந்தார்,

மணமகன் தன்தாயை பேசுவதம் கேட்டது,என்அம்மா என்னைப்பார்த்து அழுகிறாள் நான் என்ன செய்வேன் கடவளே,என்ரஅம்மாவின் நியாயமான ஆசை புதையுண்டு போகிறது,என் கண்களின் கண்ணீரை துடைத்துக்கொண்டு அம்மா வாங்கம்மா போவம்,என்று அம்மாவின் கைகளைப்பிடித்துகூட்டிவந்து ஓட்டோவிற்குள் ஏற்றினேன்

நான் பணம்வாங்கி போராடபோகவில்லை,என்குடும்பத்திற்காக போராடபோகவில்லை,எல்லாபெண்களைப்போலவும் எனக்கும் கனவுகளும் ஆசைகளும் உணர்வுகளும் உண்டு,போராளி என்றால் கூடசீதனம் தாங்கோ என்று பல திருமணம் குழம்பிப்போன பலகதைகள்.பிள்ளைக்காறன கட்டு என்றுவந்த வரன்களும் உண்டு.

அம்மா என்னை கட்டிப்பிடிச்சு அழுதா நீ அழாத பிள்ளை நான் சாகமுதல் உனக்கு நல்ல கலியாணமா பார்த்து கட்டிவச்சிட்டுத்தான் சாவன் என்றா,என்னைத்தேற்ற என்தாய் முனைந்தாள்,பெற்றவள் ஆகிட்டே.கலங்கிநின்றாள்,

நான் எதுவும் கதைக்கவில்லை.வரும் வழியெங்கும் அழுதவாறே வந்தேன்,வீட்டிற்கு வந்து அம்மாவிடம் சொன்னேன்,அம்மா நான் சிங்கப்பூரிற்கு வேலைவீசா எடுத்து வீட்டுபணிப்பெண் வேலைக்கு போகப்போறன் அம்மா,நான் இங்கிருந்தால் என்னை பார்க்கும்போதெல்லாம் உங்களிற்கும் வேதனை,ஊராரும் இன்னும் கட்டேலயா கட்டேலயா வயசு போகுதென்று கேட்கமாட்டினம்.

நீங்கள் அழாம இருங்கம்மா,39 வயசா போட்டுது,இன்னும் ஒரு கொஞ்சகால வாழ்க்கைதானேம்மா நான் கன்னியாகவேவாழ்ந்துவிட்டுப்போகிறேன் என்று கூறிவிட்டு நகர்கிறேன் நாட்டிற்காக போராடபோன எமக்கு எம்மக்கள்தரும் வலிகளை எண்ணியபடி........

No comments

Powered by Blogger.