ஸ்டெர்லைட் மீண்டும் திறக்க வாய்ப்பே இல்லை!

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று (ஆகஸ்ட் 6) தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்த பிறகு, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டு, ஆலைக்கு சீல் வைக்கப்பட்டு, மூடப்பட்டது. இதேபோல் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியமும் ஆலையை இயக்குவதற்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. இதை எதிர்த்து வேதாந்தா குரூப் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்தது. அதிலும், தமிழக அரசின் ஆணைக்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது பசுமை தீர்ப்பாயம்.

ஆனால் நிரந்தரப் பணியாளர்களை வைத்து ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான மறைமுகமான முயற்சிகளை அந்நிறுவனம் மேற்கொண்டுவருகிறது எனத் தகவலும் வெளியாகியது. அதே சமயத்தில், ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படும் என்ற தகவலும் பரவிவருகிறது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்ற வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம். அதற்கு வாய்ப்பே இல்லை. ஆலையில் ஏற்பட்டுள்ள ரசாயனக் கழிவுகள் அகற்றும் பணி நடைபெற்றுவருகிறது. தற்போது வரை 99 சதவிகிதப் பணிகள் நிறைவுபெற்றன. இதுவரை 46,000 டன் ஜிப்சம், 33,000 டன் ராக் பாஸ்பேட் அகற்றப்பட்டுள்ளன. ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து பாஸ்போரிக், கந்த அமிலம் ஆகியவை முற்றிலுமாக அகற்றப்பட்டன. ஆலையில் எஞ்சியுள்ள ராக், பாஸ்பேட், காப்பர் மணலை அகற்ற ஒரு மாதம் ஆகும் எனத் தெரிவித்துள்ளார்.

#india   #inda_Tamil_news   #Tamil

No comments

Powered by Blogger.