மீள முடியாத கடன் சுமையில் ஏர் இந்தியா!

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் மரபுவழிப் பிரச்சினைகள் பல இருப்பதாகவும், மீள முடியாத கடன் துயரில் அந்நிறுவனம் சிக்கியுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அரசுக்குச் சொந்தமான விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமான ஏர் இந்தியா, நீண்ட காலமாகவே கடுமையான நிதி நெருக்கடியையும் வருவாய் இழப்பையும் சந்தித்து வருகிறது. அந்நிறுவனத்துக்கு ரூ.48,000 கோடிக்கு மேல் கடன் சுமையும் உள்ளது. சந்தையில் நிலவும் போட்டி, விமான எரிபொருள் விலையேற்றம் போன்ற காரணிகள் ஏர் இந்தியாவை இன்னும் பாதித்து வருகின்றன. இதனால் ஏர் இந்தியாவைத் தனியார் மயமாக்கி, அதன் பங்குகளை விற்பனை செய்து கடனை அடைக்க அரசு திட்டமிட்டது. பங்கு விற்பனை முயற்சியும் தோல்வியடைந்துள்ள நிலையில், அரசு தரப்பிலிருந்தும் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஏர் இந்தியாவின் கடன் சுமையானது மீளமுடியாத ஒன்றாகும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரான சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
பிடிஐ செய்தி நிறுவனத்துடனான நேர்காணல் ஒன்றில் இதுபற்றி சுரேஷ் பிரபு பேசுகையில், “ஏர் இந்தியாவில் நிச்சயமாக மரபுவழிப் பிரச்சினைகள் இருக்கின்றன. இந்நிறுவனத்தைக் கடன் சுமையிலிருந்து மீட்டெடுப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். ஏர் இந்தியா மட்டுமல்ல, எந்தவொரு விமான நிறுவனத்துக்கும் இதுபோன்றதொரு கடனிலிருந்து மீள்வது கடினம்தான். எனவே ஏர் இந்தியாவின் மரபுவழிப் பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காண்பதுதான் சரியான முடிவாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
2007ஆம் ஆண்டில் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் ஏர் இந்தியாவை இணைத்த பிறகிலிருந்தே அது பெரும் இழப்புகளைச் சந்தித்து வருகிறது. ஏர் இந்தியாவின் கணக்கு விவரங்களின்படி, 2016-17 நிதியாண்டு வரை அந்நிறுவனத்துக்கு ரூ.47,1,45.62 கோடி கடன் சுமை இருக்கிறது. இந்நிறுவனத்தை மீட்டெடுக்க இந்த ஆண்டின் ஜூன் மாதம் வரையில் ரூ.650 கோடி பங்கு முதலீடும் செய்யப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.