சர்வதேச நீதிப்பொறிமுறையே எங்கே??

வருகின்ற செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் தொடர்பான கூட்டத் தொடர் நடைபெறவுள்ள நிலையில் காணாமல்போனோர் விடயத்தில் சர்வதேச நீதிப்பொறிமுறையை மீண்டும் வலியுறுத்தவுள்ளதாக வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

 (வியாழக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்ற சர்வதேச காணாமற்போனோர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 9 வருடங்கள் கடந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான எந்தவொரு வினைத்திறனான கடமையையும் அரசாங்கம் ஆற்றாமல் இருக்கின்றது. பலகோடி ரூபாய் செலவில் ஆணைக்குழுக்களை அமைத்தும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான எந்தவொரு முடிவையும் அரசாங்கம் எடுக்கவில்லை.

இந்நிலையில், ஐ.ந. கூட்டத்தொடருக்கு செல்லும் நாங்கள் அரசின் காலக்கெடு காலத்திலும் அவர்கள் எந்தவொரு காத்திரமான நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்பதை தெரிவிக்கப் போகின்றோம். இவ்வாறு தாமதிக்கப்படுகின்ற நீதியானது உண்மையை இல்லாமல் செய்கின்ற செயற்பாடாகவே கருத முடிகிறது.

சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கு எடுக்கப்பட்ட காலக்கெடு வரும் மார்ச் மாதத்துடன் முடிவடையவிருக்கின்றது. இதேவேளை எதிர்வரும் செப்டெம்பரில் இடம்பெறவுள்ள மாநாடு காணாமற்போனோர் விடயம் தொடர்பில் ஒரு தீர்மானம் மிகு அறிக்கையை மனித உரிமைகள் ஆணையாளர் தயாரிக்க ஏதுவான காலமாக அமைகின்றது.

ஆனாலும் பாதிக்கப்பட்ட தரப்பை சர்வதேசம் ஒரு பிரதான தரப்பாக கருதவில்லை. ஆனால் இலங்கை அரசாங்கத்தை ஒரு தரப்பாக சர்வதேசம் ஏற்றுள்ளது. இதுதொடர்பில் பாதிக்கப்பட்ட எங்களுக்கு எமது பிரச்சினைகளை பேச சமவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அதற்கு பாதிக்கப்பட்ட மக்களிடத்திலிருந்தும் பிரதிநிதிகள் வரவேண்டும்.

இதேவேளை சர்வதேசம் எமது பிரச்சினைகளை உள்வாங்கி எமக்கான பிரச்சினைகளை பெற்றுத்தரும் என்றே நாம் போராடுகின்றோம். நிச்சயமாக ஒன்றுபட்டு நாம் வலுவான அழுத்தங்களை கொடுக்கவேண்டும். அவ்வாறு சர்வதேசத்துடன் இணைந்த நீதிப்பொறிமுறையே எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியைப் பெற்றுத்தரும் என்று நம்புகின்றோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.


#Kilinochchi, #Sri Lanka  #jaffna   #tamilnews   #tamilarul.net  #Anathi_sasitharan

No comments

Powered by Blogger.