மட்டக்களப்பு விவசாயிகளுக்கு நட்டஈடு!

மட்டக்களப்பு உன்னிச்சை குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு  நட்டஈடு வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்படும்  என்று நீர்ப்பாசன நீர் முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திஸ்ஸநாயக்க தெரிவித்தார்.
உன்னிச்சை நீர்ப்பாசனத் திட்ட விவசாயிகளை ஆயித்தியமலைப் பகுதியில் நேரில் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு உன்னிச்சை நீர்பாசனக் குளத்தின் வான் கதவுகள்  கடந்த மே மாதம் 24ஆம் திகதி சடுதியாகத் திறக்கப்பட்டதனால் சுமார் 6000 ஏக்கர் சிறுபோக வேளாண்மை அழிவடைந்துள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகளுக்குப் பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளது.
உன்னிச்சைக் குளத்தின் நீரினை சரியான முறையில் முகாமைத்துவம் செய்யப்படாமை தொடர்பாக காரணங்களை ஆராய்வதற்கான குழு அமைக்கப்பட வேண்டும்  என்று  விவசாயிகள் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்தனர்.
உன்னிச்சை விவசாயிகளின் பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்கான குழு அமைக்கப்பட்டு உண்மை கண்டறியப்படும்.  பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் நட்டஈடு வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்படும் என்று அமைச்சர் பதிலளித்தார்.
உன்னிச்சை நீர்ப்பான திட்ட முகாமைத்துவக்குழுத் தலைவர் கே.யோகவேல் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், பிரதியமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா, நீர்பாசன பணிப்பாளர் நாயகம் எஸ்.மோகன்ராஜ், மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.அஸார், உன்னிச்சை திட்ட பொறியியலாளர் பார்த்தசாரதி, ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை தவிசாளர் நா.கதிரவேல் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.