சென்னைக்கும் புல்லெட் ரயில்!

சென்னை, பெங்களூர், கொல்கத்தா மற்றும் டெல்லி ஆகிய நகரங்களுக்கும் புல்லெட் ரயில் விடுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்துவருவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
மும்பை முதல் அகமதாபாத் வரையிலான இந்தியாவின் முதல் புல்லெட் ரயில் திட்டத்துக்கான கட்டமைப்புப் பணிகள் ஜப்பான் நாட்டு உதவியுடன் நடைபெற்று வருகிறது. 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் இந்த புல்லெட் ரயிலை பொதுப் போக்குவரத்துக்கு அர்ப்பணிப்பதற்கான முயற்சியில் இந்திய ரயில்வே கட்டமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மேலும் 6 வழிகளில் புல்லெட் ரயில்கள் விடுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தப் பதிலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: ‘டெல்லி-மும்பை, டெல்லி-கொல்கத்தா (லக்னோ வழியாக), மும்பை-சென்னை, டெல்லி-சென்னை, மும்பை-நாக்பூர், மும்பை-கொல்கத்தா மற்றும் சென்னை-பெங்களூரு ஆகிய 6 வழித்தடங்களில் புல்லெட் ரயில் விடுவதற்கான சாத்தியக்கூறுகளை அரசு ஆராய்ந்து வருகிறது. இந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக பிரான்ஸ், ஸ்பெயின், சீனா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் உதவிகள் பெற முயற்சிக்கப்படும்.’ மும்பை-அகமதாபாத் வரையிலான திட்டத்துக்கே ஜப்பான் நாட்டிடமிருந்துதான் ரூ.88,000 கோடி கடன் பெறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.