முப்பரிமாணத்தில் ராய் லட்சுமி!

முன்னணி நடிகையாக வலம் வருபவர்கள் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தங்களது கவனத்தை செலுத்தி வருகின்றனர். நயன்தாரா, த்ரிஷா வரிசையில் தற்போது நடிகை ராய் லட்சுமியும் அதில் இணைந்திருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் நடித்து வந்த ராய் லட்சுமி ‘ஜூலி 2’ திரைப்படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். அதன் பின் இந்தியில் மீண்டும் நடிக்கவில்லை. மலையாளத்தில் இவர் நடித்துள்ள, ‘ஒரு குட்டநாடன் பிளாக்’, ‘அரேபியன் சஃபாரி’ படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. தமிழில் நடித்த ‘யார்’ படத்தின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. அடுத்து ‘நீயா 2’ வில் நடித்து வருகிறார். மலையாளத்தில் மோகன்லாலுடனும், கன்னடத்தில் ‘ஜான்சி’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் ராய் லட்சுமி.
இதையடுத்து தமிழில் இயக்குநர் எஸ்.ஜே. சூர்யாவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய வினோத் வெங்கடேசன் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார். ஹாலிவுட்டில், கேட் பிளாஞ்செட், லில்லி ஜேம்ஸ், ரிச்சர்ட் மாடென் உட்பட பலர் நடித்து 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சிண்ட்ரெல்லா’.
அதேபாணியில் உருவாகவுள்ள இத்திரைப்படத்தில் ராய் லட்சுமி மூன்று வெவ்வேறு கெட்டப்புகளில் வருகிறார். இத்திரைப்படம் சிண்ட்ரெல்லா என்னும் முன்னணி கதாபாத்திரத்தைச் சுற்றி நடக்கிறது. ராக் ஸ்டார், இசைக் குழுவில் ஒருவர், பணிப் பெண் ஆகிய தோற்றங்களில் ராய் லட்சுமி நடிக்கவிருக்கிறார்.
மேலும் தமிழில் உருவாகும் இப்படத்திற்கு ‘சிண்ட்ரெல்லா’ என்றே பெயர் வைத்துள்ளனர். ஆனால் அப்படத்தின் ரீமேக் இல்லை என படக்குழு தெரிவித்திருக்கிறது. மேலும் இந்தப் படத்தின் கதையில் ஹாரர், பேண்டஸி, மியூசிக்கல், த்ரில்லர், டிராமா என எல்லா ஜானர்களும் இருக்கின்றன. சென்னையில் தொடங்கும் கதை அடர்ந்த காட்டுக்குள் நடக்கிறது. அக்டோபர் மாதம் படப்பிடிப்பு துவங்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.