பிரான்ஸிலுள்ள சிவன் ஆலயத்தில் மோசடிகளுடன் முறைகேடுகள்!

பிரான்ஸிலுள்ள சிவன் ஆலயத்தில் மோசடிகள் முறைகேடுகள் நடைபெறுவதனால் அதனை சீர் செய்யும் நோக்குடன் ஆலயத்தினை ஒரு மாத காலத்திற்கு பூட்டி வைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக குறித்த ஆலயத்தை நிர்மாணித்த வெற்றிவேல் ஜெயேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பிரான்ஸ் நாட்டில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த வேளை பிரான்ஸ் நாட்டின் சட்டத்திட்டத்திற்கு ஏற்றவாறே அந்த சிவன் ஆலயத்தை எனது அம்மாவின் வேண்டுகோளுக்கு இணங்க அமைத்திருந்தேன்.

பின்னர் இலங்கையில் வர்த்த நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்குடன் இலங்கை திரும்பியிருந்தேன். இலங்கை திரும்பும் போது, அந்த கோயிலினை சிவசுத சர்மா எனும் குருக்களின் பொறுப்பில் கொடுத்திருந்தேன்.

கருணாகரன் சிவகுருநாதன் என்பவரின் பொறுப்பில் ஆலய நிர்வாகத்தையும் ஒப்படைத்திருந்தேன். கடந்த 12 வருட காலமாக ஆலய பூஜை வழிபாடுகள் ஒழுங்கான முறையில் நடைபெற்று வந்தது.

தற்போது ஆலயத்தில் பல முறைகேடுகள் நடைபெற்று வந்து, தற்போது பிரான்ஸ் நாட்டு அரசாங்கம் அந்த கோயிலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளது.

அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முதல் ஆலயத்தை நானே முன் வந்து பூஜை வழிபாடுகள் நடத்தப்படாது மூடும் எண்ணத்திற்கு வந்துள்ளேன்.

இந்த மாத இறுதியில் இருந்து ஒரு மாத காலத்திற்கு ஆலயத்தினை மூடி வைத்து விட்டு ஆலயத்தில் உள்ள முறைகேடுகளை நிர்வர்த்தி செய்து ஆலய குருக்கள் மற்றும் நிர்வாகம் தொடர்பில் நடவடிக்கைகளை எடுத்த பின்னரே மீள ஆலயத்தை திறக்க தீர்மானித்துள்ளேன்.

மீள ஆலயம் திறக்கப்படும் போது ஆலயத்தில் உள்ள முறைகேடுகள் நீக்கப்பட்டு மீள ஆகாம முறைப்படி கும்பாபிசேகம் செய்து திறக்கவுள்ளேன்.

ஆலயத்தின் பெயரால் வட்டிக்கு காசு வாங்கப்பட்டு காசு மோசடிகளும் நடைபெற்று உள்ளது. அதனால் சட்ட நடவடிக்கைகளையும் எடுக்க உள்ளேன்“ என தெரிவித்துள்ளார்.


#Frankreich    #paries    #sivanTemple    #Hindu    

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.