தமிழ் இனத்தின் மீது பல கோணங்களில் அரசாங்கம் முயற்ச்சி!

தமிழ் இனத்தின் இன விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனித்ததன் பின்பு இலங்கை அரசானது தமிழ் இனம் மீண்டு எழக்கூடாது என்பதற்காக பல்வேறு வேலைகளை பல கோணங்களில் நடத்தி வருகிறது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.

வவுனியா, வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தை தொல்பொருட் திணைகளம் கையகப்படுத்த முயல்வது தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் இனத்தின் இன விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனித்ததன் பின்பு இலங்கை அரசானது தமிழ் இனம் மீண்டு எழக்கூடாது என்பதற்காக பல்வேறு வேலைகளை பல கோணங்களில் நடத்தி வருகிறது. அந்த வகையில் தான் வடபகுதியில் இன்று தோன்றியுள்ள கஞ்சா கடத்தல், மதுபோதை, குத்துச் சண்டைகள், வாள்வெட்டுக்கள் போன்ற குழுக்களை உருவாக்கி விட்டிருக்கின்றது. இதன் ஒரு அடுத்த கட்டமாக தமிழ் இனத்தின் இருப்பை இல்லாதொழித்து இருப்புக்களை மாற்றியமைக்கும் வகையில் தொல்பொருட் திணைக்களத்தின் கீழ் பல்வேறு விதமான எமது ஆதிக்குடிகளது காணிகள் அடாத்தாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

வவுனியா வடக்கு, நெடுங்கணி பகுதியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் ஆனது ஆதிகாலம் தொட்டு இந்துக்களால் வழிபடப்பட்டு வருகிறது. தொல்பொருட் திணைக்களத்தின் கீழ் உள்ளடங்காத இந்த கோவிலை தற்போது தொல்பொருட் திணைக்களம் தனது ஆளுகைக்குள் கொண்டு வர எத்தனிப்பது மிகவும் வேதனையான விடயம். அரசினுடைய இவ்வாறான வேலைகள் மிகவும் கண்டனத்திற்குரியது. உடனடியாக அவற்றை விடுத்து, இந்த நிலைப்பாடுகளை மாற்றியமைத்து தமிழர் தமது நிலங்களில் இயல்பாகவே தமது மதசுதந்திரம், இன சுதந்திரம், மத சுதந்திரத்தோடு வாழக் கூடிய ஒரு சூழலை உருவாக்க வேண்டும். இது தவறின் இந்த மக்களுடைய போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் இந்த அரசுக்கு அச்சுறுத்தலாக அமையும் எனத் தெரிவித்தார்.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.