யாழ் அராலிப் பகுதியில் மர்ம மனிதர்கள் அட்டகாசம்?

யாழ் அராலிப் பகுதியில் பொது மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதர்கள் நேற்றிரவு வட்டுக்கோட்டையிலும் பொது மக்களை அச்சுறுத்தி பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அந்தப் பகுதியில் நேற்றிரவு முழுவமும் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்ததுடன் அந்த மக்கள் பலத்த அச்சமடைந்து இரவு தூக்கமில்லாமல் இருந்ததாகவும் மக்கள் தெரிவித்துள்ளார்.

அராலிப் பகுதியில் கடந்த இருபது நாட்களுக்கு மேலாக அங்குள்ள மக்களுக்கு குள்ள மனிதர்களினால் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

அதாவது இரவு நேரங்களில் வீடுகளுக்குச் செல்லும் குள்ள மனிதர்கள் வீட்டின் கதவு மற்றும் ஐன்னல் ஓரங்களில் மறைந்திருந்தும், வீடுகளின் கூரைகளின் மேல் ஏறியிருந்தும் மக்களை அச்சுறுத்தி வந்ததுடன் வீடுகளின் மீது கல் வீச்சுத் தாக்குதலையும் மேற்கொண்டு வந்தனர்.இதன் போது வீட்டிலிருப்பவர்கள் மின் விளக்குகளை ஒளிரவிட்டு தேடிப் பார்க்கின்ற போது ஓடி ஒளித்த மறைந்து விடுகின்றனர்.

ஆனாலும் குறித்த ஒரு வீட்டிலிருந்து வேறொரு வீட்டிற்குச் சென்று அங்கும் இதுபோல அச்சுறுத்தி வந்த நிலையில், கடும் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடுகளைச் செய்து வந்தனர்.

மேலும் அங்கு இடம்பெறும் குள்ள மனிதர்களின் அட்டகாசங்கள் அச்சுறுத்தல்கள் தொடர்பில் காவல்துறையினர் இராணுவத்தினருக்கு தொடர்பிருக்கலாமென்றும் அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

அராலியில் இடம்பெற்ற இந்த விடயங்கள் எல்லாம் குறித்தான செய்திகள் ஊடகங்களில் வந்த நிலையில் குள்ள மனிதர்களின் அச்சுறுத்தல் நேற்றைய தினம் வட்டுக்கோட்டையில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

வட்டுக்கோட்டை முதலியார் பகுதியிலுள்ள ஒரு வீட்டிற்குச் சென்ற குள்ள மனிதர்கள் அந்த வீட்டின் மீது சரமாரியாக கல்வீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து வீட்டிலிருந்தவர்கள் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்த போது ஒருவர் ஓடிச் சென்று ஹயஸ் வாகனத்தில் ஏறி தப்பிச் செல்வதை அவதானித்துள்ளனர்.

இதே போன்று அங்குள்ள ஏனைய சில வீடுகளுக்குச் சென்ற குள்ள மனிதர்கள் அங்குள்ள மக்களையும் அச்சுறுத்தும் வகையில் வீட்டு காணிக்குள் மறைந்திருந்துள்ளனர்.

இதனையும் அவதானித்த போது அங்கிருந்து பாய்ந்து பாய்ந்து குள்ள மனிதர் தப்பிச் சென்றுள்ளார். அதே போல வேறு சில வீட்டின் மீதும் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அங்கு நேற்றிரவு அச்சுறுத்தல் விடுத்த குள்ள மனிதர்கள், வாகனத்தில் வந்திருக்கலாமென்றும், மக்கள் விழிப்படைய அந்த வாகனத்தில் தப்பிச் சென்றிருக்கலாமென்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.இதனால் நேற்றிரவு முழுவமும் அந்தப் பகுதியில் பெரும் அச்ச நிலைமை காணப்பட்டது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.