திரைப்படத்தை முடக்குவதால் என்னை ஒடுக்க முடியாது!

விஸ்வரூபம்-2 திரைப்படத்தை முடக்குவதால் என்னை ஒடுக்க முடியாது’ என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நடித்து நேற்று வெளியான விஸ்வரூபம்-2 திரைப்படம் தமிழகத்தின் 7 மாவட்டங்கள் மற்றும் பாண்டிச்சேரியில் வெளியாகவில்லை. இந்நிலையில் ராயப்பேட்டையில் நேற்று (ஆகஸ்ட் 10) செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் “சில இடங்களில் விஸ்வரூபம்-2 படத்தைத் திரையிடாமல் முடக்குவதால் என்னை ஒடுக்க முடியாது, இப்போது நான் அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளேன், கிடைத்த மேடைகளில் எல்லாம் நியாயமான அரசியல் பேசுவேன், எம்.ஜி.ஆர். பாணியை மட்டுமல்ல நேரு, காந்தி ஆகியோரின் பாணியையும் பின்பற்றுவேன், நல்ல பாணிகள் எல்லாம் என் பாணி” என கூறினார்.
திமுக தலைவர் கலைஞருக்கு பாரத ரத்னா விருது கொடுப்பது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு “மனமுவந்து கொடுத்தால்தான் தமிழனுக்குப் பெருமை, வலியுறுத்திக் கொடுப்பது தமிழனுக்குப் பெருமை இல்லை” என்றார்.
விஸ்வரூபம்-2 திரைப்படம் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் பாண்டிச்சேரியிலும் வெளியாகவில்லை. இதற்கு படத் தயாரிப்பாளர், விநியோகஸ்தர் சங்கம் இடையேயான பிரச்சினையே காரணம் எனக் கூறப்படுகிறது. இந்தப் பகுதிகளில் உள்ள சுமார் 60 தியேட்டர்களில் படம் வெளியாகாததால் 4 கோடி ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரை இழப்பு எனக் கூறப்படுகிறது.
விஸ்வரூபம் முதல் பாகம் வெளியானபோது படத்திற்கு எதிராக கடுமையான எதிர்ப்புகள் எழுந்த நிலையில், “90 கோடி ரூபாயை இந்த படத்தில் முதலீடு செய்திருக்கிறேன், படம் வெளியாகாவிட்டால் சொத்துகளை விற்றுவிட்டு நாட்டை விட்டே வெளியேறிவிடுவேன்” என்று கமல் உணர்ச்சி பொங்கப் பேசினார்.

No comments

Powered by Blogger.