வெள்ளத்துக்குத் தமிழகமும் காரணம்!

வெள்ள பாதிப்புக்குத் தமிழகமும் ஒரு காரணம் என உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

கேரளாவில் பெய்த பெரு மழை மற்றும் வெள்ளம் காரணமாக, முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு கருதி அணையின் நீர்மட்டத்தை 139 அடியாகக் குறைக்க கோரி இடுக்கியைச் சேர்ந்த ரசூல்ராய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 16 ஆம் தேதி மனு தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக 139 அடியாகக் குறைப்பது குறித்து அணையின் துணைக் கண்காணிப்புக் குழுவும், தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவினரும் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும்.. இரண்டு குழுவும் எடுக்கும் முடிவைத் தமிழக அரசு மதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதுதவிர முல்லைப் பெரியாறு அணைப் பகுதிகளில் இருக்கும் மக்களின் பாதுகாப்பு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கேரள அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 24 ஆம் தேதிக்கு (நாளை) ஒத்திவைத்தது.

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 23) உச்ச நீதிமன்றத்தில் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்கத் தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை. இடுக்கியில் ஏற்பட்ட வெள்ளத்திற்குத் தமிழக அரசும் ஒரு காரணம். பெரியாறு அணையில் தண்ணீரை திடீரெனத் திறந்துவிட்டதே பாதிப்பிற்குக் காரணம். அணை நீர்மட்டத்தைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கையைத் தமிழக அரசு ஏற்கவில்லை” என்று குற்றம்சாட்டியுள்ளது.

ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை 7 மணியளவில், எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றித் தமிழக அரசு முல்லைப் பெரியாறில் இருந்து சுமார் 21188 கன அடி தண்ணீரை திறந்துவிட்டது. தொடர்ந்து 8 மணியளவில் 35315 கன அடி தண்ணீரையும் திறந்துவிட்டது. இவ்வாறு திறந்துவிடப்பட்ட தண்ணீர் இடுக்கி அணையை வந்து சேர்ந்தது. முன்பாகவே இடுக்கி அணை நிரம்பியிருந்ததால் நாங்கள் இடுக்கி அணையைத் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வெள்ளத்துக்கு முழுக் காரணம் முல்லைப் பெரியாறு அணையைத் தமிழக அரசு திறந்துவிட்டதுதான் என்று கூற முடியாது; ஆனால், அதுவும் ஒரு காரணம் என்று தெரிவித்துள்ளது கேரள அரசு..

No comments

Powered by Blogger.